நாக தோஷ பரிகார பூஜையில் பாம்பு கடித்தது ஜோதிடர், பூசாரியின் பேச்சை நம்பி நாக்கை இழந்த அரசு ஊழியர்

கோபி: ஜோதிடர் மற்றும் பூசாரியின் பேச்சைக் கேட்டு புற்று முன்பு நின்று நாக்கை நீட்டி பரிகார பூஜை செய்த அரசு ஊழியரின் நாக்கை பாம்பு கடித்தது. ஈரோடு மாவட்டம் கோபி சத்தி சாலையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாகவே இரவில் தூங்கும்போது ஒவ்வொரு நாளும் பாம்பு அவரை துரத்துவது போன்றும், கடிப்பது போன்றும் கனவு வந்து கொண்டே இருந்துள்ளது.

இதனால் தூக்கத்தை இழந்து பல நாட்களாக தவித்து வந்த அரசு ஊழியர் இது குறித்து தங்களது குடும்ப ஆஸ்தான ஜோதிடர் ஒருவரை சந்தித்தார். தனது ஜாதகத்தை கொடுத்து காரணத்தை கூறுமாறு கேட்டுள்ளார்.ஜோதிடரும், அவரது ஜாதகத்தை பலவாறு கணித்து பார்த்துவிட்டு இறுதியாக, நாகதோஷம் இருப்பதாக கூறியுள்ளார். அப்போது சில ஆயிரம் ரூபாய்களை பரிகார பூஜைக்கு வாங்கிக்கொண்ட ஜோதிடர், பரிகாரம் செய்வதற்கு நாள் குறித்தும் கொடுத்து உள்ளார். அதைத்தொடர்ந்து ஜோதிடர் குறித்து  கொடுத்த நாளில் ஜோதிடரை அரசு ஊழியர் சந்தித்தபோது வீட்டிலேயே பல்வேறு பரிகாரங்களை செய்து உள்ளார்.

தொடர்ந்து ஜோதிடர் அவரை பாம்பு புற்று இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.  அங்கிருந்த கோயில் பூசாரியும் வெறும் பூஜை செய்தால் மட்டும் போதாது பாம்பு புற்றுக்கு முன்பு நாக்கை நீட்டி சில மந்திரங்களை கூற வேண்டும் எனக் கூறியுள்ளார். அதை கேட்டு பாம்பு புற்றுக்கு முன் நின்று கொண்டு நாக்கை நீட்டி, பூசாரி கூறிய மந்திரங்களை சொல்லி, புற்று முன்பு காற்றை ஊதியுள்ளார்.

அப்போது புற்றுக்குள் இருந்த பாம்பு திடீரென வெளியேறி அரசு ஊழியரின் நாக்கில் கடித்தது.  அலறி துடித்த அவரை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு 4 நாட்களாக சிகிச்சை பெற்றார். பாம்பின் விஷத்தினால் நாக்கில் உள்ள திசுக்கள் அழிந்துவிட்ட நிலையில் அரசு ஊழியரின் நாக்கு துண்டிக்கப்பட்டது.  ஜோதிடர் மற்றும் பூசாரி கூறியதை நம்பி நாக்கை இழந்த அரசு ஊழியர் இன்று வாய் பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Related Stories: