டி.பி. சத்திரம் பகுதியில் 6 ஆண்டுகளாக போலீசுக்கு டிமிக்கி கொடுத்த ரவுடி கைது

அண்ணாநகர்: சென்னை டி.பி.சத்திரம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு, வழிப்பறி கொள்ளையர்கள், கஞ்சா வியாபாரிகள், ரவுடிகள் என குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர். அதேபோல், கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கோபி தலைமையில் பழைய குற்றவாளிகள் மற்றும் ரவுடிகளின் பட்டியல் தயார் செய்து அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், டி.பி. சத்திரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி மோகன்ராஜ் (38), இவர் மீது 2005, 2008ல் டி.பி. சத்திரம் காவல் நிலையத்தில் இரண்டு கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் இவர் தலைமறைவாகிவிட்டார். இவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். சுமார் 6 வருடங்களாக போலீசாருக்கு சவால் விட்டு டிமிக்கி கொடுத்து தொடர்ந்து தலைமறைவாக சுற்றி வந்தார். எனவே, ரவுடி மோகன்ராஜை போலீசார் தொடர்ந்து கண்காணித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் டி.பி.சத்திரம் பகுதியில் அவர் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆய்வாளர் சக்தி வேலாயுதம் தலைமையில் போலீசார் மாறு வேடத்தில் அங்கு சென்று கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது கீழ்ப்பாக்கம் கல்லறை அருகே நடந்து வந்த ரவுடியை போலீசார் சுற்றிளைத்தனர். ஆனாலும், போலீசார் பிடியில் இருந்து தப்ப முயன்றார். அவரை போலீசார் விரட்டி சென்று கைது செய்தனர். பின்னர், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: