கோபி அருகே கக்ரா குட்டை கிளை வாய்க்காலில் திடீர் உடைப்பு-உடனடியாக சீரமைத்த அதிகாரிகள்

கோபி : கோபி அருகே உள்ள உக்கரம் மில்மேட்டில் கக்ரா குட்டை கிளை வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கசிவு ஏற்பட்டது. முழுமையான உடைப்பு ஏற்பட்டு இருந்தால் 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களும் 10க்கும் மேற்பட்ட கிராமங்களும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் என்ற நிலையில் கீழ்பவானி பாசன அதிகாரிகள் உடனடியாக மணல் மூட்டைகளை வைத்து உடைப்பை தற்காலிகமாக சரி செய்து வருகின்றனர்.

 பவானிசாகர் அணையில் இருந்து கரூர் மாவட்டம் அஞ்சூர் மங்களப்பட்டி வரை சுமார் 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.கீழ்பவானி பாசன வாய்க்கால் கட்டப்பட்டு சுமார் 65 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு உக்கரம் மில் மேடு அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலின் பிரதான வாய்க்காலில் இருந்து கக்ரா குட்டை கிளை வாய்க்கால் மதகு அமைக்கப்பட்ட இடத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கசிவு ஏற்பட தொடங்கியது.

நேற்று காலை அந்த வழியாக சென்ற விவசாயிகள் இதுகுறித்து கீழ்பவானி பாசன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் கசிவு நீர் அதிகரிக்க தொடங்கியது.

அதைத்தொடர்ந்து அங்கு சென்ற உதவி செயற்பொறியாளர் தலைமையிலான குழுவினர் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து உடனடியாக மண், எம்.சாண்டு ஆகியவை கொண்டு வரப்பட்டு மூட்டையாக கட்டி உடைப்பு ஏற்பட்ட இடத்தில் வைத்து தற்காலிகமாக உடைப்பை சரி செய்தனர்.

தற்போது பாசனத்திற்காக வாய்க்காலில் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் முழுமையாக சீரமைக்க முடியாத நிலையில் தற்காலிகமாக உடைப்பு சரி செய்யப்பட்டு உள்ளது.இரவு நேரங்களில் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு இருந்தால்,மில்மேடு, கருப்பராயன் கோயில், கக்ராகுட்டை, குள்ளம்பாளையம், கொத்துக்காடு, அரசூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு உள்ள விவசாய பயிர்களும், 10க்கும் மேற்பட்ட கிராமங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கும்.

உடனடியாக உடைப்பு கண்டறியப்பட்டு உடைப்பு சரி செய்யப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

Related Stories: