முதலில் மயில், முயல், தற்போது காட்டுப்பன்றிகள் மக்காச்சோள சாகுபடிக்கு அடுத்தடுத்து சோதனை-ராஜபாளையம் அருகே விவசாயிகள் கவலை

ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே, நரிக்குளம் பகுதியில் மக்காச்சோள பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்வதால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.ராஜபாளையம் அருகே, நரிக்குளம் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 500 ஏக்கரில் விவசாயம் நடந்து வருகிறது. இதில், பெரும்பாலும் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். கடந்த செப்டம்பரில் நடவு செய்து, தண்ணீர் பாய்ச்சி, களை எடுத்து பயிர்களை வளர்த்து வந்துள்ளனர். ஆரம்ப காலத்தில் மயில் பயிர்களை சேதப்படுத்தியுள்ளது.

அடுத்து முயல் தொல்லை இருந்ததாக தெரிவித்தனர். இதையெல்லாம் கட்டுப்படுத்தி கடந்த 80 நாட்களாக பயிர்களை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில், வனப்பகுதியில் இருந்து, வயலுக்கு வரும் காட்டுப்பன்றிகள் மக்காச்சோளத்தை நாசம் செய்கிறது. ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்து காப்பாற்றிய பயிர்கள் ஒரே நாள் இரவில் நாசமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கிராமத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்துள்ளதால், ரூ. 5 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மின்வேலி அமைக்க அனுமதியில்லை என்பதால், கயிறு கட்டி பயிர்களை பாதுகாத்து வருகின்றனர்.ஆனால், கயிறுகளை அறுத்துக் கொண்டு காட்டுப்பன்றிகள் வயலுக்குள் புகுந்து நாசம் செய்வதாக கூறுகின்றனர்.எனவே, காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தவும், பாதுகாக்கப்பட வேண்டிய விலங்குகள் பட்டியலில் இருந்து அவற்றை நீக்கவும் கோரிக்கை விடுத்துள்ள நரிக்குளம் விவசாயிகள், சேதமான பயிர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: