தமிழகத்தில் முதன் முறையாக வேலூரில் ஏற்பாடு, மனம் திருந்திய பெண் மாவோயிஸ்ட் வாழ்வாதாரத்திற்கு ஆவின் பாலகம் கலெக்டர், 4 எஸ்பிக்கள் திறந்தனர்

வேலூர்: தமிழகத்தில் முதன் முறையாக மனம் திருந்தி காவல்நிலையத்தில் சரண் அடைந்த பெண் மாவோயிஸ்ட் வாழ்வாதாரத்திற்காக வேலூரில் ஆவின் பாலகம் திறக்கப்பட்டது. விழாவில் கலெக்டர், 4 எஸ்பிக்கள் பங்கேற்றனர். கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் இயக்க மாநிலக்குழு உறுப்பினராக பிரபா என்கிற சந்தியா (40) இயங்கி வந்தார். இவர் மீது ஷிமோகா, உடுப்பி மாவட்டங்களில் 44 வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த 2006ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்தார். இவரை பிடித்து கொடுத்தால் ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என கர்நாடக மாநில காவல்துறை அறிவித்தது.

அதே இயக்கத்தில் மத்தியக்குழு உறுப்பினராக இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி இருந்தார்.

இவர் மீது கர்நாடகாவில் 25 வழக்குகள் உள்ளது. இவரது தலைக்கும் ரூ.5 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டது. இவரை 2021ம் ஆண்டு கேரள போலீசார் கைது செய்தனர். கணவரை கைது செய்ததால் மாவோயிஸ்ட் இயக்க செயல்பாட்டில் இருந்து பிரபா விலகினார். தொடர்ந்து அவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து மனம் திருந்தி வாழமுடிவு செய்த அவர், கடந்த ஆண்டு டிசம்பர் 18ம் தேதி திருப்பத்தூர் எஸ்பி பாலகிருஷ்ணன் முன்னிலையில் சரணடைந்தார். பின்னர் அவர் வேலூர் அரியூரில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்கி உள்ளார். இந்நிலையில் திருந்தி வாழும் பிரபாவின் வாழ்வாதாரத்திற்காக தமிழகத்தில் முதன் முறையாக ஆவின் பாலகம் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி அரியூர் முதியோர் இல்லம் எதிரே நேற்று ஆவின் பாலகம் திறக்கப்பட்டது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி திறந்து வைத்தார். இதில் போலீஸ் எஸ்பிக்கள் ராஜேஷ்கண்ணன் (வேலூர்), தீபாசத்யன் (ராணிப்பேட்டை), பாலகிருஷ்ணன் (திருப்பத்தூர்), கண்ணம்மாள் (கியூ பிராஞ்ச்) ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பேசுகையில், ‘நக்சலைட்டாக இருந்து திருந்தி வாழ்பவர்களின் வாழ்வாதாரத்திற்காக அரசு நிதியுதவி தருகிறது. அதன்படி மாவோயிஸ்ட்டாக இருந்த பிரபாவுக்கு ஆவின் பாலகம் தொடங்கப்பட்டுள்ளது. சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு அரசுக்கு எதிராக செயல்படுபவர்கள் திருந்தி வாழ அரசு உதவி செய்கிறது. இதற்காக அவர்கள் உறுதிமொழி தரவேண்டும்.

கள்ளச்சாராயம் காய்ச்சி திருந்துபவர்களுக்கு வாழ்வாதாரம் மேம்படுத்த நிதி உதவி வழங்கப்படுகிறது. அதேபோல் நக்சலைட்களாக இருந்து திருந்தியவர்களின் வாழ்வாதாரம் காக்க அரசு ஆதரவு தருகிறது’என்றார். இதில் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், ஆவின் பொதுமேலாளர் ரவிக்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சரவணன், மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட ெபாறியாளர் பிரகாஷ், தாசில்தார் செந்தில் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: