போலீஸ் ஆவேன் என கூறிய பள்ளி மாணவனை தனது இருக்கையில் உட்காரவைத்து வாழ்த்திய எஸ்.ஐ.; கோட்டார் காவல் நிலையத்தில் நெகிழ்ச்சி

நாகர்கோவில்: நாகர்கோவில், மீனாட்சிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள், கோட்டார் காவல் நிலையத்துக்கு நேற்று வருகை தந்து காவல் நிலைய செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டனர். இன்ஸ்பெக்டர் ராமர் , சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் பயிற்சி சப் இன்ஸ்பெக்டர் அழகு தண்டாயுதபாணி ஆகியோர் காவல் துறையினரின் செயல்பாடுகள், காவல் நிலையத்தில் அன்றாடம் நடைபெறும் பணிகள் குறித்து விளக்கினர்.

மாணவர்களுடன் உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் மற்றும் ஆசிரியர்கள் வந்திருந்தனர். சுமார் 40 மாணவர்கள் வந்திருந்தனர். மாணவர்களிடம், யாரெல்லாம் போலீசாக விரும்புகிறீர்கள் என என எஸ்.ஐ. ஜெயகுமார் கேட்டார். அப்போது மாணவன் ஒருவன், நான் எஸ்.ஐ. ஆவேன் என்றார்.

அவனை தனது சீட்டில் அமர்த்தி எஸ்.ஐ. ஜெயக்குமார் வாழ்த்தினார். இதனால் மாணவன் பெரும் மகிழ்ச்சி அடைந்தான். மாணவர்களிடம் பேசிய இன்ஸ்பெக்டர் ராமர், சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர், நல்ல சமுதாயத்தை மாணவர்களால் உருவாக்க முடியும். படிக்கும் போதே நல்லொழுக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். போதை பொருள் விற்பனை பற்றி காவல் நிலையத்துக்கு வந்து புகார் தெரிவியுங்கள். புகார் தெரிவிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும். உங்கள் நண்பர்கள் யாராவது போதைக்கு அடிமையாகி இருந்தால் அவர்களை மீட்ெடடுக்க காவல்துறை உதவியை நாடுங்கள். பெற்றோருக்கு நல்ல குழந்தைகளாக விளங்க வேண்டும் என்றனர்.

Related Stories: