ஈமு கோழி மோசடி வழக்கு: பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10.25 கோடி அபராதம்

கோவை: திருப்பூர் மாவட்டம் பொன்கோவில் நகரில் ஜோதிவேல் ஈமு மற்றும் நாட்டுக்கோழி பண்ணையை அமுல் (36) என்ற பெண் நடத்தி வந்தார். ஈமு கோழி பண்ணையில் முதலீடு செய்ய பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.  அதன்படி, ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் கூடாரம் அமைத்து 300 கோழிக்குஞ்சுகள், மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் 24 மாதத்துக்கும், அதன் பின்னர் முதலீடு காலம் முடிந்தவுடன் முதலீட்டு தொகை முழுவதும் திரும்ப வழங்கப்படும் என்றும் ஆசை வார்த்தை கூறினர்.

இதை நம்பி திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பலர் முதலீடு செய்தனர். ஆனால், அவர்கள் கூறியபடி முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில், ஈமு கோழி பண்ணை உரிமையாளர் அமுல், மொத்தம் 524 பேரிடம் ரூ.10 கோடியே 3 லட்சத்து 66 ஆயிரத்து 690 மோசடி செய்தது தெரியவந்தது.

இது தொடர்பாக கோவை டான்பிட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதில், நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.  பண்ணையின் பெண் உரிமையாளர் அமுலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 கோடியே 25 லட்சத்து 8 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ரவி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையின்போது அமுல் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.

Related Stories: