புதுகை அருகே குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த புகார் சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த புகார் தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சங்கம் விடுதி ஊராட்சி குருவாண்டான் தெருவிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த மாதம் 25ம் தேதி மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து அந்த தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட குடிநீர் மாதிரி, திருச்சியிலுள்ள மண்டல பொது சுகாதார நீர் பகுப்பாய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியை சேர்ந்த சண்முகம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டனர். இதையடுத்து நேற்றுமுன்தினம் சிபிசிஐடி போலீசார், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தனர். இந்நிலையில் சிபிசிஐடி அதிகாரிகள் நேற்று காலை 11மணியளவில் அந்த கிராமத்திற்கு சென்று தண்ணீர் தொட்டியை பார்வையிட்டனர். ப மக்களிடம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். அதிகாரிகள் கூறுகையில், மீண்டும் இந்த பகுதி மக்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம் என்றனர்.

* இரட்டை குவளை முறை?
குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கை தொடர்ந்த சண்முகம் என்பவர், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 8 கிராமங்களில் இரட்டை குவளை முறை பின்பற்றப்படுகிறது. பொது குளத்தில் பட்டியல் சமூக மக்களை குளிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்த சாதிய பாகுபாடுகளை களைய வேண்டும். சிபிசிஐடி போலீசார் சாதிய பாகுபாடுகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து சிபிசிஐடி அதிகாரிகள், புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதிய பாகுபாடுகள் மற்றும் இரட்டை குவளை முறை பின்பற்றப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தனர்.

The post புதுகை அருகே குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த புகார் சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: