பல்வேறு திருட்டு வழக்கில் தொடர்புடைய வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் கைது

*16 பவுன் நகை மீட்பு

சூலூர் : சூலூரில் பல்வேறு திருட்டு வழக்கில் தொடர்புடைய கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 16 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
கோவை மாவட்டம் சூலூர் பகுதிகளில் தனியாக செல்லும் பெண்கள் மற்றும் கடைகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த வாரத்தில் மட்டும் முத்து கவுண்டன் புதூர் பகுதியில் உள்ள கடையில் இருந்த சங்கர் மனைவி உதயா என்பவரிடம் 4 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் காங்கேயம் பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் இரண்டரை பவுன் தாலி செயின் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து செயின் பறிப்பு நடந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.

இது தொடர்பான குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் உத்தரவிட்டு இருந்தார். அதன்பேரில், கருமத்தம்பட்டி டிஎஸ்பி தங்கராமன் மேற்பார்வையில் சூலூர் இன்ஸ்பெக்டர் மாதைய்யன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் வழிப்பறி கொள்ளையர்களை தேடி வந்தனர். அப்போது கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த சிக்கந்தர் மகன் சதாம் உசேன் (33) என்பவரும் ஒண்டிப்புதூர் கம்பன் நகரை பகுதியைச் சேர்ந்த ராஜன் மகன் பிரின்ஸ் என்கின்ற அப்துல்ரகீம் (33) ஆகிய இருவரும் கூட்டாக சேர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர். கடந்த ஒரு வாரமாக அவர்களை போலீசார் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை சூலூர் பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த சதாம் உசேன் மற்றும் அப்துல்ரகீம் ஆகியோரை சூலூர் எஸ்ஐ ராஜேந்திர பிரசாத் தலைமையிலான போலீசார் நிறுத்தி அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சூலூர் பகுதிகளில் செயின் பறிப்பில் ஈடுபட்டதை ஒத்துக்கொண்டனர். மேலும் இவர்கள் கோவில்பாளையம், மதுக்கரை காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளிலும் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து வழிப்பறி செய்த 16 பவுன் நகைகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post பல்வேறு திருட்டு வழக்கில் தொடர்புடைய வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: