வீட்டை இடித்ததால் பார்வையற்ற தம்பதி, மகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி: மயிலாடும்பாறையில் பரபரப்பு

வருசநாடு: தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள மயிலாடும்பாறையை சேர்ந்தவர் மொக்கச்சாமி. இவருக்கு அதே பகுதியில் சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தின் குறிப்பிட்ட அளவை பார்வையற்ற தம்பதிகளான ஜெயபால், நிம்மி மற்றும் பரமன், பரமசிவன், கருத்தக்கண்ணன் ஆகியோர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளதாக, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மொக்கச்சாமி வழக்கு தொடர்ந்தார்.

இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான தீர்ப்பில், ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று நடந்தது. 60க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள், 40 ஆண்டுகளுக்கு மேலாக நிலத்தில் வீடு கட்டி வசித்து வருவதாகவும், பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்தனர். அவர்களுக்கு ஆதரவாக மயிலாடும்பாறை கிராம கமிட்டியினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், எந்தவித சமரசமும் செய்ய முடியாது என கூறி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது பரமன் என்பவர், வீட்டிற்குள் சென்று கதவை பூட்டி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். உடனே போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பத்திரமாக மீட்டனர். பலத்த எதிர்ப்புக்கு இடையே 5 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

அப்போது பார்வையற்ற தம்பதி, ‘வீட்டை இடித்து விட்டால் தங்குவதற்கு வேறு இடம் இல்லை. எனவே வீட்டை காலி செய்ய சிறிது கால அவகாசம் கொடுங்கள்’ என்று போலீசாரிடம் தெரிவித்தனர். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் மனமுடைந்த பார்வையற்ற தம்பதி ஜெயபால், நிம்மி மற்றும் அவரது மகள் ஆகியோர் வீட்டிற்குள் சென்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். 3 பேரையும் போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: