குடிபோதையில் தகராறு செய்த விவகாரம்; போலீசில் புகார் கொடுக்கச் சென்ற பெண்ணை மறித்து சரமாரி வெட்டு: ரவுடிகள் 2 பேர் கைது

பெரம்பூர்: சென்னை ஓட்டேரி குன்னூர் நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் நளினி (36). இவரது வீட்டின் முன்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 2 பேர் மது அருந்தியுள்ளனர். இதை பார்த்துவிட்ட நளினி, ‘’ஏன் இங்கு மது அருந்துகிறீர்கள்’’ என  கேட்டு எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த போதை நபர்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் பயந்துபோன நளினி, வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

இதுசம்பந்தமாக ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்க நளினி சென்றுள்ளார். இதுபற்றி அறிந்ததும் நளினியிடம் தகராறு செய்த இரண்டு பேர் வந்து, நளினியை வழிமறித்து, ‘‘எங்களுக்கு எதிராக புகார் கொடுக்க செல்கிறாயா’’ உனக்கு அவ்வளவு தைரியம் உள்ளதா? என்று கேட்டு தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து நளினியின் வலது கை, இடது முழங்காலில் சரமாரியாக தாக்கியுள்ளனர். அதிர்ச்சி அடைந்த நளினி கூச்சல் போட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதனால் தாக்குதல் நடத்திய நபர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். இதன்பிறகு படுகாயம் அடைந்த நளினியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுபற்றி நளினி கொடுத்த புகாரின்படி, ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இதில், ஆவடி அருகே திருமுல்லைவாயல் எட்டியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பூபதி ராஜன் (20), சென்னை ஓட்டேரி குன்னூர் நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்த சூர்யா என்கின்ற காவாமேடு சூர்யா (22)  ஆகியோர்தான் நளினியை தாக்கியவர்கள் என்று தெரிந்தது.

காவா மேடு சூர்யா மீது தலைமை செயலக காலனி காவல் நிலையம், புளியந்தோப்பு மற்றும் ஓட்டேரி காவல் நிலையங்களில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. பூபதி ராஜன் மீது 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதையடுத்து அவர்களை தேடிவந்த நிலையில், பூபதிராஜன், சூர்யா ஆகியோரை நேற்று கைது செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: