இங்கிலாந்திடம் பாகிஸ்தான் தோற்ற விவகாரம்; பஞ்சாப் கல்லூரியில் மாணவர்களுக்குள் கல்வீச்சு: 9 பேர் படுகாயம்; போலீஸ் குவிப்பு

மோகா: இங்கிலாந்திடம் பாகிஸ்தான் அணி தோற்ற விவகாரத்தால் பஞ்சாப் கல்லூரியில் மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. கல்வீச்சு சம்பவத்தில் 9 பேர் காயமடைந்த நிலையில், அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டம் கல் கலன் கிராமத்தில் லாலா லஜ்பத் ராய் பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரி செயல்படுகிறது. அந்த கல்லூரி வளாகத்தில் நேற்று மாலை ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்களுக்கும், பீகார் மற்றும் பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பைச் சேர்ந்த சில மாணவர்கள் காயமடைந்தனர். கல்வீச்சு சம்பவங்களும் நடந்ததால், கல்லூரி வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஜஸ்விந்தர் சிங்  கூறுகையில், ‘டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. இந்த கல்லூரியில் காஷ்மீர் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்களும் படித்து வருகின்றனர். அவர்களில் பீகாரை சேர்ந்த மாணவர்கள் சிலர் பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக கருத்துகள் கூறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து இருதரப்பு மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் மோதலாக முற்றியது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். கல்வீச்சு சம்பவத்தில் 9 மாணவர்கள் காயமடைந்தனர். தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. கல்லூரி வளாகம் மற்றும் விடுதியைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: