மகாராஷ்டிரா மாநிலத்தில் மோடி பிரசாரம் செய்த இடத்தில் எல்லாம் பா.ஜ தோல்வி: நன்றி தெரிவித்து கிண்டல் செய்த சரத்பவார்


மும்பை: 18வது மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் காங்கிரஸ், உத்தவ் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ்(சரத் சந்திரபவார்) ஆகிய கட்சிகள் 30 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பா.ஜ கூட்டணி வெறும் 17 இடங்களை பெற்று படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக மகா விகாஸ் அகாடி கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. கூட்டத்துக்குபின் செய்தியாளர்களை சந்தித்த உத்தவ் தாக்கரே, “மக்களவை தேர்தல் வெற்றி மகா விகாஸ் அகாடி கூட்டணியின் முடிவல்ல. ஆரம்பம். பாஜ வெல்ல முடியாத கட்சி என்பது வெற்றுத்தனமான கட்டுக்கதை என்பதை மக்கள் உணர்த்தி விட்டனர்.

இப்போது உள்ளது மோடி அரசு கிடையாது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு. இந்த அரசு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சரத் பவார், “மகாராஷ்டிராவில் மோடி எங்கெல்லாம் பிரசார பேரணி, பொதுக்கூட்டங்களை நடத்தினாரோ அங்கெல்லாம் பாஜவும், அதன் கூட்டணி கட்சிகளும் தோற்று விட்டன. அங்கெல்லாம் மகா விகாஸ் அகாடி வெற்றி பெற்றது. தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி தந்த பிரதமர் மோடிக்கு எங்கள் நன்றிகள்” என்று கூறினார். அப்போது கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை என்று உத்தவ் தாக்கரே, சரத் பவார் இருவரும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

The post மகாராஷ்டிரா மாநிலத்தில் மோடி பிரசாரம் செய்த இடத்தில் எல்லாம் பா.ஜ தோல்வி: நன்றி தெரிவித்து கிண்டல் செய்த சரத்பவார் appeared first on Dinakaran.

Related Stories: