வானில் சாகசம் செய்து கொண்டிருந்த போது 2 விமானங்கள் மோதியதில் 6 பேர் பலி: அமெரிக்காவில் சோகம்

டெக்சாஸ்: அமெரிக்காவில் விமானம் ஒன்று வானில் சாகசம் செய்து கொண்டிருந்த போது, மற்றொரு விமானம் குறுக்கே வந்து மோதியில் 6 பேர் பலியாகினர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இரண்டு விமானங்கள் வானில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த மோதலின் வீடியோ சமூக வலைதளங்களில்  வெளியாகியுள்ளது. மேற்கண்ட இரண்டு விமானங்களும் டெக்சாஸின் டல்லாஸ் நகரில் நடைபெற்ற விமான கண்காட்சியில் கலந்து கொள்ள வந்த பழங்கால ராணுவ விமானங்கள் எனவும், அந்த விமானங்கள் வானில் பறந்து சென்ற போது மோதி விபத்துக்குள்ளானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து டெக்சாஸ் போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகரில் விண்டேஜ் ஏர் ஷோ நடந்து கொண்டிருந்தது. போயிங் பி-17 விமானம் ஒன்று வானில் சாகசங்களை செய்து கொண்டிருந்தது. திடீரென்று பெல் பி-63 என்ற மற்றொரு விமானம் குறுக்கே வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக இரு விமானங்களும் மோதிக்கொண்டன.

அதனால் ஏற்பட்ட தீ விபத்தில் இரு விமானங்களும் தீயில் எரிந்தன. 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தன. இடிபாடுகளில் சிக்கியிருந்தனர்களை காப்பாற்றும் பணி நடந்து வருகிறது. ஆனால், விமானி உட்பட 6 பேர் இந்த விபத்தில் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது. அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது’ என்றனர்.

Related Stories: