ஜனாதிபதி குறித்து சர்ச்சை கருத்து: திரிணாமுல் அமைச்சர் மீது பாஜக புகார்

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஆளும் திரிணாமுல் கட்சி அமைச்சர் அகில் கிரி, நந்திகிராம் தொகுதி மக்களிடம் பேசுகையில், ‘நந்திகிராம் பாஜக எம்எல்ஏ சுவேந்து அதிகாரி, எனது தோற்றம் நன்றாக இல்லை என்று கூறுகிறார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மக்களின் தோற்றத்தின் அடிப்படையில் அவர்களை எடை போடாது. உங்களது ஜனாதிபதி பதவியை நாங்கள் மதிக்கிறோம். உங்களுடைய ஜனாதிபதி எப்படி தோற்றமளிக்கிறார்?’ என்று பேசினார். இவரது பேச்சை கேட்ட மக்கள் ஆரவாரம் எழுப்பினர். இவரது இந்த பேச்சு தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இந்நிலையில், மேற்குவங்க பாஜக வெளியிட்ட அறிக்கையில், ‘ஜனாதிபதி திரவுபதி முர்மு பழங்குடி சமூகத்தில் இருந்து வந்தவர்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சரான அகில் கிரி, மகளிர் நலன் துறையை சேர்ந்த மற்றொரு அமைச்சர் சஷி பாஞ்சா இருக்கும்போது, ஆட்சேபனைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்’ என்று கூறியுள்ளது. பாஜக எம்பியான சவுமித்ரா கான் தேசிய மகளிர் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘அகில் கிரியை உடனடியாக கைது செய்ய வேண்டும். கிரிக்கு எதிராக முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை எம்எல்ஏ பதவியில் இருந்து நீக்க முயற்சிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Related Stories: