20 வருடங்களுக்கு முன் வைகை ஆற்றில் எடுக்கப்பட்ட சிற்பத்தை ஆய்வு செய்ய வேண்டும்-திருப்புவனம் மக்கள் கோரிக்கை

திருப்புவனம் : திருப்புவனம் அருகே வைகை ஆற்றில் 20 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட சிற்பத்தை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருப்புவனம் அருகே செல்லப்பனேந்தல் பகுதி வைகை ஆற்றில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மணல் குவாரி அமைத்து லாரியில் மணல்  அள்ளப்பட்டது. அப்போது   இரண்டு அடி உயரத்தில் 3 அடி நீள கல்லில் மூன்று புடைப்பு சிற்பங்கள் செதுக்கப்பட்டு நடுவில் ஒரு பெண் சிலையும் இருபுறமும் ஒரு ஆண் மற்றொருபுறம் ஒரு பெண் உருவம் பொறிக்கப்பட்ட சிலை கண்டெடுக்கப்பட்டது. அது மெயின் ரோட்டில் உள்ள ஒரு மரத்தடியில் இருந்த பிள்ளையார் கோயிலில் வைத்து அம்மனாக செல்லப்பனேந்தல் மக்கள் வழிபாடு செய்து வருகிறனர்.

இது குறித்து கிராமமக்கள் கூறுகையில், இது 7ம் நூற்றாண்டை சேர்ந்த தவ்வை சிற்பம் என்று  சிலர் குறிப்பிடுகின்றனர்.  சிலர் இது தவ்வை உருவமல்ல. தவ்வை கழுதை பூட்டிய வண்டியில் இருகால்களும் தொங்கிய நிலையில் கையில் பெருக்குமாறு வைத்திருக்க வேண்டும். சுகாசனத்தில் ஒருகாலை தொங்க விட்டபடி இந்த சிற்ப உருவம் உள்ளது. மாந்தனுக்கு மாட்டு முகம் இருக்க வேண்டும். இதில் மனிதமுகம் உள்ளது. ஒரு பக்கம் பெண்ணின் முகம் உள்ளது. நாங்கள் பெயரிடப்படாத அம்மனாக வழிபட்டு  வருகிறோம் இந்த சிற்பம், குறித்தும் இதன் காலம் போன்ற விவரங்களை தொல்லியல் துறை அலுவலர்கள்தான் ஆய்வு செய்து தெளிவுபடுத்த வேண்டும்  என்றனர்.

Related Stories: