தேடப்படும் நபராக அறிவித்த பிறகும் நடிகை ஜாக்குலினை கைது செய்யாதது ஏன்? அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: ‘சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் தொடர்பு இருப்பதால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட பிறகும், நடிகை ஜாக்குலினை அமலாக்கத்துறை ஏன் கைது செய்யவில்லை?’ என்று விசாரணை நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார். இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், சிறையில் இருந்தபடியே தொழிலதிபரிடம் ரூ.200 கோடியை பெற்று மோசடி செய்துள்ளார்.

இந்த மோசடியில் சுகேஷுடன் இணைந்து ஈடுபட்டதாக பிரபல நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேகியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பதால் ஜாக்குலின் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க, அவரை தேடப்படும் நபராக அறிவித்து நோட்டீசும் வழங்கியது. இந்த வழக்கில் ஜாக்குலினுக்கு கடந்த செப்டம்பரில், டெல்லி கீழ் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து அமலாக்கத் துறை தொடர்ந்த மேல்முறையீட்டு மனு, டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைலேந்திர மாலிக் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஜாக்குலின் ஆஜரானார், அவருடைய வழக்கறிஞர் முன்வைத்த வாதத்தில், ‘மோசடி வழக்கு தொடர்பாக நடிகை ஜாக்குலினிடம் அமலாக்கத் துறை பலமுறை விசாரணை நடத்தி உள்ளது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. அதில், ஜாக்குலின் பெயர் இல்லை. மோசடி பற்றிய விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், ஜாக்குலினுக்கு நிரந்தர ஜாமீன் வழங்க வேண்டும்,’ என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சைலேந்திர மாலிக், ‘ஜாக்குலினை தேடப்படும் நபராக அறிவித்து நோட்டீஸ் வழங்கிய பிறகும், அமலாக்கத் துறை ஏன் இன்னும் அவரை கைது செய்யவில்லை?’ பண மோசடி வழக்கில் தொடர்புள்ள அனைவரும் சிறையில் இருக்கும் போது, ஜாக்குலின் மட்டும் வெளியில் இருப்பது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினார். பின்னர், வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தார்.

Related Stories: