ஒரே நாளில் பதிவு செய்யப்பட்ட 78 பத்திரங்கள் வருகை பதிவேட்டில் 2 நாள் கையெழுத்திடாமல் சார்பதிவாளராக பணியாற்றிய உதவியாளர்

*பத்திர எழுத்தர்கள் பெயர் பட்டியலுடன் சிக்கியது அம்பலம்

*இரணியலில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் புதிய தகவல்கள்

நாகர்கோவில் : இரணியல் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.4 லட்சத்து 48 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் சார்பதிவாளராக பணியாற்றிய உதவியாளர் 2 நாட்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திடாமல் பணியாற்றியதும், ஒரே நாளில் 78 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இரணியல் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி ரூ.4 லட்சத்து 48 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சார்பதிவாளராக பணியாற்றிய உதவியாளர் உட்பட 8 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை தொடர்பாக பல்வேறு புதிய தகவல்கள் முதல் தகவல் அறிக்கையில் தற்போது வெளியாகியுள்ளது. இரணியல் சார்பதிவாளர் அலுவலகத்தில்  கடந்த 4, 5 தேதிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய போது பொறுப்பு சார்பதிவாளராக பணியாற்றிய சுப்பையா உதவியாளர் ஆவார்.

அன்று திங்கள்நகரில் பத்திர எழுத்து அலுவலகம் வைத்திருக்கும் எழுத்தர் ராஜேஷ்வரியின் அலுவலக உதவியாளர் ராம்குமார் என்ற ரகு 4 பத்திரங்கள் பதிந்ததாகவும், வரும் நாட்களில் பத்திரம் பதிய வேண்டியிருப்பதாகவும், அதுசம்பந்தமான சந்தேகம் கேட்க வந்ததாவும் தெரிவித்திருந்த நிலையில் அவரை சோதனை செய்து அவரிடம் இருந்து ரூ.40 ஆயிரத்து 800 கைப்பற்றப்பட்டது.

இரணியலில் பத்திர எழுத்தர் அலுவலகம் வைத்திருக்கும் எழுத்தர் டேவிட்டின் அலுவலக உதவியாளர் ஜெயா, மூன்று பத்திரங்கள் பதிந்தாக கூறிய நிலையில் அவரிடம் ரூ.50 ஆயிரம் ஒரே கட்டாக இருந்தது பறிமுதல் செய்யப்பட்டது.  பள்ளியாடியில் பத்திரபதிவு அலுவலகம் வைத்திருக்கும் எழுத்தர் ராஜசுந்தரத்தின் அலுவலக உதவியாளர்கள் ராஜேஷ் மற்றும் கலைச்செல்வன் ஆகியோர் 2 பத்திரங்கள் பதிவு செய்ததாக கூறிய நிலையில் ராஜேஷிடம் ரூ.44,300 மற்றும் கலைச்செல்வனிடம் ரூ.16500ம் கைப்பற்றப்பட்டது.

தக்கலையில் பத்திர எழுத்து அலுவலகம் வைத்திருக்கும் சுஜி தனக்கு பத்திரம் எழுத உரிமம் இல்லை, அனுபவம் உள்ளது என்று கூறியிருந்த நிலையில் அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. அவருடன் நின்றிருந்த சுபாஷினி என்பவரிடம் ரூ.41 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. பத்திரபதிவு அலுவலகத்தில் பதிவுக்கு உதவியாக இருந்தவர் என்று கூறிக்கொண்டிருந்த குமார் என்பவரிடம் விசாரித்தபோது அவரிடம் ரூ.1 லட்சத்து 57 ஆயிரம்  பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் சார்பதிவாளர் அலுவலக ஓய்வு அறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் உள்ளே, மேஜை விரிப்புக்கு அடியில் ரூ.8,800ம், தற்காலிக பணியாளர் நாகராஜன், சுபா அமர்ந்திருந்த கணினி அறையில் ரூ.18 ஆயிரத்து 200, சார்பதிவாளர் இருக்கை அருகே முத்திரை பதிக்கும் மேஜை, ஆவணங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அலமாரிகளில் இருந்து ரூ.15 ஆயிரமும் கைப்பற்றப்பட்டது. இவ்வாறு ஒரேநாளில் மொத்தம் பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ.4 லட்சத்து 48 ஆயிரத்து 800 ஆகும்.

மேலும் அன்று ஒரே நாளில் அடமான பத்திரம், உரிமை வைப்பு ஆவணம், உயில் ரத்து பத்திரம், தானப்பத்திரம், விடுதலை பத்திரம், பரிமாற்ற பத்திரம், ரத்து பத்திரம், செட்டில்மென்ட் பத்திரம், பாதை அவகாசம், பாகப்பிரிவினை பத்திரம், பிழைத்திருத்த பத்திரம், ரசீது பத்திரம், விலை பத்திரம், பொது அதிகார பத்திரம் என்று 78 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

இரணியல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பண பதிவேடு புத்தகம் பராமரிக்கப்படுவதில்லை, கொடிநாள் பதிவேடு பராமரிக்கப்படுவதில்லை. அலுவலக வருகை பதிவேட்டில் உதவியாளரான பொறுப்பு சார்பதிவாளர் நவம்பர் 3, 4 தேதிகளில் கையொப்பம் ேபாடவில்லை. இயக்க பதிவேடும் அக்டோபர் 18க்கு பின்னர் பராமரிக்கப்படவில்லை. லஞ்சம் பற்றிய விழிப்புணர்வு வாசகம் மற்றும் லஞ்ச புகார்களை தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண் மற்றும் முகவரி அடங்கிய அறிவிப்பு சார்பதிவாளர் அலுவலகத்தின் முன் பகுதியிலோ அல்லது வேறு பகுதியிலோ பொதுமக்கள் பார்வையில்படும்படி வைக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

குப்பை பெட்டியில் பணம்

சார்பதிவாளர் சுப்பையா இருக்கைக்கு  முன்பு போடப்பட்டிருந்த மேஜையில் சோதனை நடத்திய போது அவர் கைப்பட  எழுதிய காகிதம் ஒன்றும் இருந்தது. இது குறித்து அவரிடம் கேட்டபோது அவர்  தன்னால் பதிவு செய்யப்பட்ட மொத்த ஆவணங்களின் பத்திர எழுத்தர் விபரங்களை  குறித்து வைத்திருந்ததாக கூறியுள்ளார். அதனையும் விசாரணைக்காக போலீசார்  கைப்பற்றினர். மேலும் அவர் இருக்கைக்கு அருகே உள்ள குப்பைகள்  போட வைத்திருந்த அட்டை பெட்டியில் இருந்த பொட்டலத்தில் இருந்து ரூ.4200,  கணினி மேஜையில் இருந்த இளநிலை உதவியாளர் மோகன்பாபுவின் மேஜை டிராயரில்  இருந்து ரூ.3000ம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: