ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சிவன் கோயில்களில் அன்னாபிஷேக வழிபாடு

கழுகுமலை : ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு கோவில்பட்டி, கழுகுமலை, கட்டாரிமங்கலம், மாரமங்கலம் சிவன் கோயில்களில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடந்தது.

தமிழகத்தின் தென்பழநி என பக்தர்களால்  அழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில்  ஜம்புலிங்கேஸ்வரருக்கு ஐப்பசி மாத பவுர்ணமியொட்டி அன்னாபிஷேகம் நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 6.15  மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை மற்றும் பிற கால பூஜைகள் நடந்தன. முற்பகல் 1 மணிக்கு ஜம்புலிங்கேஸ்வரருக்கு  18 வகையான திரவியங்கள், நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம்  நடந்தது. நிறைவாக அன்னாபிஷேகமும் மஹா தீபாராதனையும்  நடந்தது.

இதை கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், தலைமை எழுத்தர்  செண்பகராஜ், கழுகுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள்  உள்ளிட்ட திரளானோர் தரிசித்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சந்திர கிரகணத்தை முன்னிட்டு  கோயில் நடை சாத்தப்பட்டு இரவு 7 மணிக்கு மேல் திறந்து பல்வேறு  பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பவுர்ணமி கிரிவலம் நடந்தது. இதையொட்டி வள்ளி-  தெய்வானையுடன் அருள்பாலிக்கும் கழுகாசலமூர்த்திக்கு நடந்த சிறப்பு வழிபாடுகளில்  பங்கேற்று தரிசித்தனர்.

கோவில்பட்டி:கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசுவாமி கோயிலில் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகத்தையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து திருப்பள்ளி எழுச்சி, திருவனந்தல் பூஜைகள் நடந்தன. பின்னர் சுவாமி சன்னதி முன்பு அன்னாபிஷேக சிறப்பு ஹோமம் நடந்தது. அதன்பிறகு ஹோமத்தில் வைக்கப்பட்ட புனித நீருக்கு தீபாராதனை நடைபெற்றது.தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.

பின்னர் சுவாமிக்கு அன்னம்பாலிப்பு செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுவாமிநாத பட்டர், செண்பகராம பட்டர், கோபி பட்டர் ஆகியோர் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

இதேபோல், புற்றுக்கோயிலான வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் கோயிலில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுப்பிரமணி அய்யர் செய்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஏரல்: ஏரல் அருகே மாரமங்கலத்தில் சந்திரசேகரி அம்பிகை சமேத சந்திரசேகர சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஐப்பசி அன்னாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பகல் 12 மணிக்கு சந்திரசேகருக்கு அன்னாபிஷேகம், மதியம் 2 மணிக்கு அலங்கார தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

விழாவில் சிர்கோனியம் மேலாளர் பலவேசம், மூக்கன் சித்தர், செந்தில் ஆண்டவர் அறக்கட்டளை நிறுவனர் விஜயன், சிவத்தொண்டர் லீலாவதி மற்றும் திரளான மக்கள் பங்கேற்றனர். கேரளா தொழிலதிபர் தீப்பாச்சி ரமேஷ் மற்றும் தூத்துக்குடி அன்புவிலாஸ் தொழிலதிபர் ராஜு ஆகியோர் அன்னதானம் வழங்கினர். ஏற்பாடுகளை ஆலய சிவத்தொண்டர் முத்துக்குமார் செய்திருந்தார்.

சாத்தான்குளம்:சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் நடராஜரின் பஞ்ச விக்ரக ஸ்தலமான சிவகாமி அம்பாள் சமேத அழகியகூத்தர் கோயிலில் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம் சிறப்பு பூஜை நடந்தது. பூஜையையொட்டி காலை 9 மணிமுதல் அழகியகூத்தர் அருட்பணி மன்றத்தினர் சார்பில் திருவாசகம் முற்றோதல் நடந்தது.பகல் 11 மணிக்கு அபிஷேகம்,12 மணிக்கு அன்னாபிஷேகம், 1 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Related Stories: