முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்குகளில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்குகளில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெண்டர் முறைகேட்டில் முறைகேடு செய்ததாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வாத, பிரதிவாதங்கள் முடிவடைந்து தற்போது தீர்ப்பானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை கோவை மாநகராட்சிகளில் டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு என பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ்,  மற்றும் டீக்காராமன் அமர்வில் நடைபெற்றது. இந்த விசாரணையின் போது முன்னாள் அமைச்சர் சார்பில் உச்சநீதிமன்றம் மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.வி.ராஜு, சித்தார்த் லூத்ரா ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

டெண்டர் ஒதுக்கியதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேல்மணிக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், இந்த வழக்கு அரசியல்  உள்நோக்கத்துடன் தொடரப்பட்டது என்றும் வாதிட்டனர். அரசு தரப்பில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி மத்திய தணிக்கை துறை அறிக்கையில், டெண்டர்கள் குறைந்த விலையில் தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையானது இன்று நடைபெற்றது. இதில் இன்றைக்கு அறப்போர் இயக்கம் சார்பாக வழக்கறிஞர் ஆர்.சுரேஷ் ஆஜராகி ஒரே ஐபி முகவரில், ஒரே இடத்தில் இருந்து டெண்டர்களை முன்னாள் அமைச்சருக்கு நெருங்கியவர்கள் விண்ணப்பித்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், 47 ஒப்பந்தங்கள் முன்னாள் அமைச்சரின் சகோதரர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒப்பந்தங்கள் ஒதுக்கியத்தில் முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு உள்ளது என்றும், வேலுமணியின் பினாமியான ராஜன் சந்திரசேகருக்கு ரூ.100 கோடி அளவுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகவும் அவர் வாதிட்டார். இதில் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்புள்ளதாகவும், குறிப்பாக கீழ் மற்றும் நடுத்தர ஒப்பந்ததாரர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய தணிக்கை துறை அறிக்கையில், ஒப்பந்தங்கள் ஒதுக்கியதில் எவ்வாறு  முறைகேடு நடைபெற்றது என்று விவரிக்கப்பட்டதாகவும், முறைகேடு நடைபெற்றத்துக்கான அனைத்து முகாந்திரமும் உள்ளதாக தெரிவித்தார். குறிப்பிட்ட புகாருக்கு ஆதாரமாக ஏராளமான ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டுளளதாகவும், ஒப்பந்த முறைகேடுகளால் அரசுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வாதிட்டார்.

லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, ஒரே ஐபி முகவரின் ஒப்பந்தங்கள் விண்ணப்பிக்கப்பட்டதற்கான ஆவணங்கள் எல்லாம் நீதி முன்னாள் சமர்ப்பித்தார். முதலில் குறைவான விலைக்கு ஒப்பந்தங்கள் கோரப்படும் என்றும் பின்னர் அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு அதே ஒப்பந்தங்கள் புதிதாக அதிக விலைக்கு நெருங்கியவர்கள் பயனடையும் வகையில் மீண்டும் அந்த ஒப்பந்தங்கள் கோரப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்த ஒப்பந்தங்களுக்கு நிர்வாக ரீதியிலான அனுமதியை எஸ்.பி.வேலுமணிதான் வழங்கினார் என அவர் வாதிட்டார்.

இந்த வாதங்களுக்கு பதிலளித்த எஸ்.பி.வேலுமணி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.வி.ராஜு ஆரம்பகட்ட விசாரணையை புகார் தாரர்கள் ஏற்றுக்கொண்டதாகவும், ஆட்சி மாற்றத்துக்கு பிறகு அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு தொடர்பட்டதாகவும் பதில் வாதம் செய்தார்.

அனைத்து வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

Related Stories: