பொதுமக்களின் அலைச்சலை தவிர்க்க ஆதார் மையங்கள் 473 ஆக உயர்த்த இலக்கு: யுஐடிஏஐ அதிகாரி தகவல்

 

மங்களூரு,: பெரியவர்கள் சிரமமின்றி ஆதார் சேவைகளைப் பெறும் வகையில், நாடு முழுவதும் முழு நேர சேவை மையங்களின் எண்ணிக்கையை 473 ஆக உயர்த்த யுஐடிஏஐ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் 88 முழுமையான ஆதார் சேவை மையங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. சிறார்களுக்கு அஞ்சல் நிலையங்களில் எளிதாகச் சேவைகள் கிடைத்தாலும், பெரியவர்கள் பெயர் மாற்றம் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பிக்கப் பல மாவட்டங்களைக் கடந்து செல்ல வேண்டிய சூழல் நிலவி வந்தது. ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் முதல் 17 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு பயோமெட்ரிக் புதுப்பிக்கக் கட்டணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது பெரியவர்களுக்கான சேவையை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய ஆதார் மையத்தைத் திறந்து வைத்த யுஐடிஏஐ தலைமைச் செயல் அதிகாரி புவனேஷ் குமார், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் நாடு முழுவதும் ஆதார் மையங்களின் எண்ணிக்கையை 473 ஆக உயர்த்த உள்ளதாகத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் எளிதான வாழ்க்கை முறையை உறுதி செய்யும் விதமாக இந்த விரிவாக்கம் அமையும்; இதன் மூலம் பெரியவர்கள் அலைச்சலின்றி அனைத்துத் திருத்தங்களையும் மேற்கொள்ளலாம்’ என்று உறுதியளித்துள்ளார்.

Related Stories: