டெல்லி: இந்த ஆண்டில் மட்டும் பல்வேறு நாடுகளிலிருந்து 24,600 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், இதில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் விசா விதிமீறல் மற்றும் சட்டவிரோத குடியேற்றம் காரணமாக இந்தியர்கள் தொடர்ந்து திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், இந்த ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் 81 நாடுகளில் இருந்து மொத்தம் 24,600 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா அதிகளவிலான இந்தியர்களை வெளியேற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சவுதி அரேபியா அந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. புள்ளிவிபரங்களின்படி, சவுதி அரேபியாவிலிருந்து மட்டும் கடந்த ஓராண்டில் 11,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவிலிருந்து 3,800 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்; இது கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும். மேலும் மியான்மரிலிருந்து 1,591 பேரும், மலேசியாவிலிருந்து 1,485 பேரும், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 1,469 பேரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். பிரிட்டனில் இருந்து 170 மாணவர்கள் வெளியேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. வளைகுடா நாடுகளில் வேலை விசா காலம் முடிந்தும் தங்கியிருத்தல் மற்றும் முறையான ஆவணங்கள் இல்லாததே வெளியேற்றத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. அதேவேளையில் அமெரிக்காவில் டிரம்ப் அரசின் கடுமையான குடியேற்றக் கட்டுப்பாடுகள் காரணமாகவும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ‘சைபர் அடிமை’ மோசடியில் சிக்கியவர்களும் அதிகளவில் மீட்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
