வரைவு பட்டியலில் விடுபட்டவர்களை மீண்டும் சேர்ப்பதில் சிக்கல் எஸ்ஐஆர் சிறப்பு முகாம்களில் குளறுபடி: எந்த ஆவணங்களை தருவது என்பதில் குழப்பம், அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படும் வாக்காளர்கள்

சென்னை: எஸ்ஐஆர் தீவிர திருத்தத்திற்கு பிறகு வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில் விடுபட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. எனினும், படிவத்துடன் எந்த ஆவணங்களை தருவது என்பதில் பெரும் குழப்பம் நிலவுகிறது. இதனால், நீக்கப்பட்ட அல்லது விடுபட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேவையின்றி தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தில் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பணிகள் நடந்து வந்தன.

கடந்த நவம்பர் 4ம் தேதி தொடங்கிய எஸ்ஐஆர் பணி கடந்த 14ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, வரைவு வாக்காளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் கடந்த 19ம் தேதி வெளியிட்டது. இதில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் இருந்து மொத்தம் 5.34 கோடி பேருக்கு வாக்குரிமை இருப்பதாகவும், 97.37 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இவர்களில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டு உள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனையடுத்து பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயர் சேர்க்கும் பணிகள் கடந்த 19ம் தேதி தொடங்கியது. ஜனவரி 18ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள 75 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. சென்னையை பொறுத்தவரை 4,079 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டன.

இதில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பாக படிவம் 6ஐ பூர்த்தி செய்து வாக்காளர்கள் சமர்ப்பித்து வருகின்றனர். அந்தவகையில் இந்த முகாம்களில் கடுமையான குளறுபடிகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைப்பது மட்டுமின்றி, கோபமும் அடைந்துள்ளனர். குறிப்பாக, ஆன்லைன் வசதியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக ஆயிரக்கணக்கானோர் நேரடியாக முகாம்களுக்கு வந்து நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகின்றது.

முகாம்களில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு (பி.எல்.ஓ) முறையான பயிற்சியோ தெளிவான அறிவுறுத்தல்களோ இல்லாததால் விண்ணப்பங்கள் ஏற்பதில் பெரும் குழப்பம் நிலவுகிறது. ஒரே விஷயத்திற்கு ஒரு அலுவலர் ஒரு விதியைச் சொல்ல, மற்றொரு அலுவலர் வேறொரு விதியைச் சொல்லும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர். ‘‘தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய முடியாததால் தான் நேரில் சமர்ப்பிக்க வந்தோம்.

இங்கும் எந்த ஆவணத்தை பெறுவது என்பதில் குழப்பம் நிலவுகிறது,’’ என்று பலர் வருத்தம் தெரிவிக்கின்றனர். அதேபோல், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்கள் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள 13 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என கூறிய நிலையில், பல்வேறு வாக்குச்சாவடி மையங்களில் உள்ள நிலை அலுவலர்கள் நீக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை (வோட்டர் ஐடி) மட்டும் இருந்தால் போதும் என தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக அலுவலர்களிடம் விளக்கம் கேட்கும் போது, ‘‘பழைய தகவல்களை எடுப்பதற்காக இந்த வாக்காளர்கள் அடையாள அட்டை பெற்றுவருவதாகவும். ஆனால் இது ஒரு ஆவணமாக எடுத்துக்கொள்ளாமல் 13 ஆவணங்களில் ஒன்றினை கட்டாயம் காண்பிக்க வேண்டும்,’’ என கூறுகின்றனர். இதுபோன்ற குளறுபடிகளை தடுப்பதற்காக வாக்குசாவடி நிலை அலுவலர்களுக்கு முறையான மேம்பட்ட பயிற்சி அளித்து, முகாம்களின் செயல்முறையை எளிமையாக்கி, மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு வாக்காளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நீக்கப்பட்டவர்கள் பெயர்களை மீண்டும் சேர்க்க சென்னையில் 4,000 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், விடுபட்ட வாக்காளர்கள் சென்னையில் குறிப்பிட்ட முகவரியில் வசித்து வரும் நிலையிலும், ஆவணங்கள் சரியாக இருந்தபோதும் பெரும்பாலான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை என்பது விடுபட்ட வாக்காளர்களின் குற்றச்சாட்டு.

அதேநேரத்தில், விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முயற்சித்த போது, அவர்களின் ஆதார் அட்டையில் இருக்கும் விவரங்களுக்கும், ஆன்லைன் படிவத்துக்கும் இடையே எழுத்துப் பிழைகள் ஏற்படுகின்றன. அதனால் அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதனால் முகாம்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று பிஎல்ஓக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, விடுபட்டவர்கள் முகாம்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2005ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் பெற்றோரின் விவரங்கள் கிடைத்தாலும், பகுதி எண், மற்றும் வாக்குச் சாவடி விவரங்கள் அந்த குறிப்பிட்ட போர்ட்டலில் கிடைக்கவில்லை என்பதும் பெரிய குறையாக இருக்கிறது. அதனால் விடுப்பட்ட நபர்களால் விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

* இங்க வராதீங்க… அங்க போங்க…
முகவரி மாறியவர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டவர்கள், தங்கள் பகுதியில் இருக்கும் முகாம்களை விட்டு பழைய பகுதியில் உள்ள முகாம்களுக்கு சென்றால், அங்குள்ள பிஎல்ஓக்கள் மீண்டும் புதிய முகவரியில் .உள்ள முகாம்களுக்கு செல்லுங்கள் என்று விரட்டுகின்றனர். இந்நிலையில், சிலரிடம் புதிய முகவரிக்கான சான்று இல்லாததால், 2 பகுதிகளிலும் உள்ள முகாம்களுக்கு மாறி மாறி அலைகின்றனர்.

தேர்தல் ஆணைய அலுவலர்கள் இதற்கு சரியான வழிகாட்ட மறுக்கின்றனர். ஏற்கெனவே உள்ள முகவரியில் வாக்காளர் அட்டை இருக்கும் போது, புதிய முகவரியில் விண்ணப்பித்தால் 2 பதிவு ஏற்படும். அதனால் அந்த பெயர்கள் நீக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த பிரச்னையால் சென்னை வாக்காளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

* ஒரே நாளில் 2.56 லட்சம் பேர் விண்ணப்பம்
வாக்காளர் பட்டியலில் மீண்டும் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்களில் நேற்றைய தினம் மட்டும் தமிழகம் முழுவதும் 2,56,793 பேர் விண்ணப்பித்துள்ளனர். 97 லட்சம் பேர் வரைவு வாக்காளர்கள் பட்டியலில் நீக்கப்பட்ட நிலையில் இதுவரை 4.42 லட்சம் மீண்டும் பட்டியலில் இணைக்க படிவங்களை பூர்த்தி செய்து வழங்கி உள்ளனர். இதில் பெயர் நீக்கம் கோரி 4,741 பேர் படிவம் 7-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளனர்.

* 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ்
தமிழ்நாட்டில் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீட்டு படிவங்களை முறையாக சமர்ப்பிக்காததால் வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணிகள் இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 97 லட்சம் பேர் பட்டியலில் நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இவர்களில் ஏற்கெனவே படிவம் சமர்ப்பித்த 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எஸ்ஐஆர் படிவத்தை நிரப்பி, அத்துடன் அவர்கள் கேட்ட ஆவணங்களை கொடுத்தும், அதே ஆவணத்தை திரும்பவும் சமர்ப்பிக்க நேரில் வருமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதன்மூலம் தேவையின்றி அலைக்கழிக்கின்றனர். இதனால் மன உளைச்சல் ஏற்படுகிறது என வாக்காளர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: