இதுவரை திமுகவுக்கு வாக்களிக்காத மக்களிடம் கூட இந்த ஆட்சி நல்ல பெயர் எடுத்துள்ளது: திருவண்ணாமலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

திருவண்ணாமலை: திமுகவுக்கு இதுவரை வாக்களிக்காத மக்களிடம் கூட திராவிடமாடல் ஆட்சி நல்ல பெயரை எடுத்திருக்கிறது என்று திருவண்ணாமலையில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸடாலின் பேசினார். திருவண்ணாமலை மலப்பாம்பாடி கலைஞர் திடலில், நேற்று முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்பிக்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, மாநகர மேயர் நிர்மலாவேல்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலெக்டர் தர்ப்பகராஜ் வரவேற்றார்.

விழாவில் ரூ.631.48 கோடி மதிப்பில் முடிவுற்ற 314 திட்டங்களை தொடங்கி வைத்து, ரூ.63.74 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, ரூ.1400 கோடி மதிப்பில் 2,66,194 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கடந்த கல்வியாண்டில், திருவண்ணாமலை மாவட்ட மாடல் ஸ்கூலில் இருந்து மட்டும் 137 மாணவர்கள் நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கு தேர்வாகி இருக்கிறார்கள்.

இவர்கள் எல்லோரும் மிக மிக எளிமையான பின்ணணியிலிருந்து வரக்கூடிய மாணவர்கள். இது ஒரு மிகப் பெரிய சாதனை. இந்த மாவட்டத்தில் செய்யப்பட்டு வருகின்ற திட்டங்கள் மற்றும் பணிகளின் பட்டியலை கேட்டேன். லிஸ்ட் கேட்டால், ஒரு புக்கையே கொடுத்துவிட்டார்கள். மிகவும் உன்னிப்பாக ஒவ்வொரு திட்டத்தைப் பற்றியும் சொல்லியிருந்தார்கள். ஒவ்வொரு மாவட்டமும், ஒவ்வொரு குடும்பமும் என்று ஒட்டுமொத்தமாக தமிழ்நாடும் வளர வேண்டும் என்று உழைக்கிறோம்.

ஒட்டுமொத்த நாடே திரும்பி பார்க்கின்ற வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறோம். அதுவும் எப்படிப்பட்ட நிலையில் இருந்தது என்று யோசித்துப் பாருங்கள், ஒன்றிய பாஜக அரசின் ஜிஎஸ்டியால் வரி உரிமை இல்லை, நமக்கு வரவேண்டிய நிதியும் வழங்கவில்லை. குடைச்சல் கொடுப்பதற்காகவே அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்ற ஆளுநர் ஒருவர் உட்கார்ந்திருக்கிறார். தமிழ்நாட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு, தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படுகின்ற துரோகிகள், துரோகிகளுக்கு அடிமை சாசனம் எழுதி தந்து, சரணாகதி அடைந்த அடிமைகள் என்று அத்தனை சவால்களையும் முறியடித்து நாம் முன்னேறியிருக்கிறோம்.

இதுதான், திராவிட மாடல். இந்த வளர்ச்சிதான் பலருடைய கண்களை கூச செய்கிறது. வயிறு எறிகிறது. அதனால் தான், எப்படியாவது தமிழ்நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்று பார்க்கிறார்கள். பொறுப்புள்ள, ஒன்றிய அமைச்சர் பொறுப்புகளில் இருப்பவர்கள் கூட, அத்தனை வெறுப்புணர்ச்சியை பரப்புகிறார்கள். தமிழ்நாட்டு மீது வெறுப்புணர்ச்சியை பரப்பினால், அதுமூலமாக, வட மாநிலங்களில் வாக்குகள் பெற முடியும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால், அவர்கள் நினைப்பது நடக்கவில்லை. அதற்குப் பதிலாக என்ன நடைபெறுகிறது? தமிழ்நாட்டைப் பற்றி இப்படி பேசுகிறார்களே ஏன் என்று, வடமாநில யுடியூபர்கள் தேடி பார்த்து, தமிழ்நாட்டின் தனித்தன்மையை, சாதனை திட்டங்களை, பொருளாதார வளர்ச்சியை தெரிந்து கொண்டு, நமக்கு ஆதரவாக வீடியோக்களைப் போட ஆரம்பித்துவிட்டார்கள். வளர்ச்சி தொடர்பான எந்த மேப் எடுத்தாலும், இந்தியாவின் தெற்கு பகுதி வளமாக இருப்பதை எடுத்துச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

நம்முடைய திராவிட மாடல் அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பு, இதே திருவண்ணாமலையில் இருந்துதான் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்கின்ற பெயரில், உங்களின் கோரிக்கை மனுக்களை பெற்று, ஆட்சிக்கு வந்ததும், 100 நாட்களில் தீர்த்து வைக்கின்ற பயணத்தைத் தொடங்கினேன். ஆட்சிக்கு வந்ததும் முதல் நாளே அதற்கென்று ஒரு தனித்துறையை ஏற்படுத்தி, அதற்கென்று ஒரு அதிகாரியை நியமித்தேன்.

வாக்களித்தவர்கள் மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களும் பாராட்டும் ஆட்சியை நடத்துவேன் என்று அன்றைக்கு நான் வாக்குறுதி அளித்தேன். அதைத்நான் செய்திருக்கிறேன். அதை செய்திருக்கிறேனா இல்லையா? கேட்கவில்லை, சத்தமாக சொல்லுங்கள். நீங்கள் மட்டுமல்ல, சமூக வலைத்தளங்களில், பலர் போடுகின்ற பதிவுகளிலும், கமெண்ட்ஸ்களிலும் நிறைய பேர் என்ன சொல்கிறார்கள் என்றால், நான் தி.மு.க. ஆதரவாளர் இல்லைதான். ஆனாலும், நான் முதல்வன் உண்மையாவே இந்த ஆட்சியின் சிறந்த திட்டம்.

இதை பாராட்டாமல் இருக்க முடியாது என்று ஒரு கமெண்ட் வருகிறது. அதேபோல இன்னொருத்தர், என்ன சொல்லியிருந்தார் என்றால், “நான் எப்போதுமே தி.மு.க.வுக்கு வாக்களித்தது இல்லை. ஆனால், கல்வித்துறையை பொறுத்தவரைக்கும், கடந்த 4 ஆண்டுகளில், பெரிய முன்னேற்றத்தைப் பார்க்கிறேன். நிறைய சாதனைகளை செய்கிறார்கள். காலை உணவுத் திட்டம் போன்று ஒரு திட்டம் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வரவில்லை.

இன்னும் எத்தனை ஆண்டு ஆகும் என்று தெரியவில்லை என்று சொல்லியிருந்தார். மாநில உரிமையை நாம் விட்டுக்கொடுக்காமல் இருப்பதைப் பற்றியும் நிறைய பேர் பாராட்டி எழுதி இருக்கிறார்கள். ஏன், “தொகுதி மறுசீரமைப்பு வந்தால், தமிழ்நாட்டின் ஜனநாயக வலிமை குறையும் – தி.மு.க. அரசு தான் இந்தியா முழுவதும் தலைவர்களை ஒன்றுதிரட்டி போராடுகிறார்கள் என்று எழுதியிருக்கிறார்கள்.

இப்படி தி.மு.க.வுக்கு இதுவரை வாக்களிக்காத மக்களிடம் கூட நல்ல பெயரை இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சி எடுத்திருக்கிறது. ஆனால், ஒன்றிய பாஜக அரசு இதற்கு அப்படியே தலைகீழாக நடக்கிறது. பா.ஜ.க. ஆதரவாளர்களே, இந்த ஒன்றிய அரசை கழுவி ஊத்துகிறார்கள். ‘எத்தனால்’ கலந்த பெட்ரோல், தலைநகர் டெல்லியை மூச்சுத்திணற வைக்கும் மாசடைந்த காற்று, இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி, பாஜக அரசுகள் கட்டுகின்ற கட்டடங்கள், சிலைகள், மேம்பாலங்கள் எல்லாம் சிறிது நாட்களிலேயே இடிந்து விழுகிறது.

தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். இத்தனை நாள் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், வெளியே சொல்லவும் முடியாமல் இருந்த பாஜக காரங்களே இப்போது இதையெல்லாம் பார்த்து புலம்பத் தொடங்கிவிட்டார்கள். திராவிட மாடல் அரசு மீதும் சில பேர் விமர்சனம் வைப்பார்கள். அந்த விமர்சனத்தில் நியாயம் இருக்கிறதா? என்று பார்த்து, சரி செய்கின்ற முதலமைச்சர்தான் உங்கள் நம்பிக்கைக்குரிய இந்த ஸ்டாலின்.

ஆனால், ஒன்றிய பாஜக அரசு எந்தக் கோரிக்கையையும் கண்டு கொள்வதில்லை. எந்த விமர்சனத்தையும் நியாயத்துடன் பார்ப்பது இல்லை. உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன், திருவண்ணாமலை மாவட்டம் கிராமங்கள் அதிகமாக இருக்கின்ற மாவட்டம் இந்த மாவட்டம். ஏன், விவசாயிகள் நிறைந்திருக்கின்ற மாவட்டம் இந்த மாவட்டம். ஆரணி அரிசி என்றால் அவ்வளவு தரமாக இருக்கும். அதனால், மற்ற யாரையும் விட உங்களுக்குத்தான் நூறு நாள் வேலைத்திட்டம் எவ்வளவு முக்கியமானது என்று மிகவும் நன்றாக தெரியும்.

அந்தத் திட்டத்திற்கு ஒன்றிய பாஜக அரசு இப்போது மூடுவிழா நடத்தியிருக்கிறார்கள். வறுமையை ஒழிப்பதிலும், கிராம மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிப்பதிலும் இந்தத் திட்டம் பெரிய சாதனையை படைத்தது. ஆனால், இப்போது பாஜக அந்த திட்டத்தில் காந்தியடிகளின் பேரையும் எடுத்துவிட்டார்கள். 100 நாள் வேலை மக்களின் உரிமை என்று இருந்ததையும் தூக்கிவிட்டார்கள். கடந்த 10 ஆண்டுகளாக, சிறிது சிறிதாக சிதைத்துவிட்டு வந்த இந்த திட்டத்தை, இப்போது மொத்தமாக நீக்கிவிட்டார்கள்.

இதை எதிர்த்தும், நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நாம்தான் போராடிக் கொண்டிருக்கிறோம். இதையெல்லாம் அவர்கள் கவனிக்கிறார்களா என்றால், இல்லை. தன்னை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, இதை எதிர்த்து குரல் கொடுக்க துணிச்சல் இல்லாமல், ஆதரித்து பேசிக் கொண்டிருக்கிறார். அவர்கள் கட்சியும், நாடாளுமன்ற மாநிலங்களவையில் இதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள்.

இந்த திராவிட மாடல் நல்லாட்சி தொடர, திருவண்ணாமலை மக்கள் எப்போதும் போல வரும் தேர்தலிலும், முழுமையான ஆதரவை எங்களுக்கு வழங்கவேண்டும். தமிழ்நாடு நம்பர் ஒன்றாக தொடர நீங்கள் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அட்வான்ஸ் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். விழாவில், டிஆர்ஓ ராம்பிரதீபன், மாநில மருத்துவ அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், முன்னாள் நகராட்சி தலைவர் இரா.ஸ்ரீதரன், மாநகர செயலாளர் கார்த்திவேல்மாறன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

* ‘கை கட்டி பேசாதே..’மாணவனுக்கு முதல்வர் அன்பு அறிவுறுத்தல்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மலப்பாம்பாடி கலைஞர் திடலில் நேற்று நடந்த அரசு விழாவில், புதியதாக கட்டப்பட்டுள்ள அரசு மாதிரி பள்ளி மற்றும் விடுதி கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து, விழா முடிந்து அவர் தங்கியிருந்த அருணை மருத்துவக் கல்லூரி விருந்தினர் மாளிகைக்கு செல்லும் வழியில், அரசு மாதிரி பள்ளி மற்றும் விடுதியை முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது, வகுப்பறைகளுக்கு நேரில் சென்று புதிய கட்டிடத்தின் வசதிகள் மற்றும் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தார். அரசு செயல்படுத்தும் திட்டங்களை பயன்படுத்தி, வாழ்வில் முன்னேற வேண்டும் என தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிலையில், தங்களுடைய வகுப்பறைக்கு முதல்வர் நேரில் வந்ததை பார்த்து வியப்பில் ஆழ்ந்த மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும், மாணவர்களுடன் முதல்வர் கலந்துரையாடியபோது, ஒரு மாணவன் கைகளை கட்டியபடி பேசினான். அப்போது, மாணவனின் கைகளை கீழே தளர்த்திய முதல்வர், கைகட்டி பேசக்கூடாது என அன்போடு கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories: