புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பதிலடியாக, இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட 9 முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு, 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மே 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை நீடித்த இந்த மோதலில், இந்தியாவின் பதிலடியை தாங்க முடியாத பாகிஸ்தான் ராணுவம் தானாக முன்வந்து சண்டை நிறுத்தத்தை கோரியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற 129வது மனதின் குரல் நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, ‘2025ம் ஆண்டு ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை சேர்க்கும் பல தருணங்களை தந்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றி நமது தேசப்பற்றுக்கு ஒரு அடையாளமாக மாறியுள்ளது. இதன் மூலம் இன்றைய இந்தியா தனது பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது என்பதை உலகம் தெளிவாக உணர்ந்துள்ளது. மேலும் வந்தே மாதரம் பாடல் 150 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு, கடந்த நவம்பர் 7ம் தேதி ஒன்றிய அரசு சார்பில் சிறப்பு தபால் தலை மற்றும் நாணயம் வெளியிடப்பட்டதையும், மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் இதில் பங்கேற்றதும் பாராட்டுக்குரியது’ என்றார்.
