நள்ளிரவில் விடுதிக்குள் புகுந்த மர்ம நபர் நெல்லையில் சித்த மருத்துவ கல்லூரி மாணவிகள் திடீர் தர்ணா -கூடுதல் பாதுகாப்பு, சிசிடிவி வசதி செய்ய வலியுறுத்தல்

நெல்லை : நெல்லை  அரசு சித்த மருத்துவக்கல்லூரி மாணவிகள் விடுதிக்குள் நள்ளிரவு மர்ம நபர்  புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதைக் கண்டித்தும், கூடுதல் பாதுகாப்பு வசதி  செய்து தரக்கோரியும் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை  புறக்கணித்து முதல்வர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில்  ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பாளையங்கோட்டை சித்த  மருத்துவக்கல்லூரி சுமார் 60 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்கது. இந்தக் கல்லூரிக்கான மாணவர் விடுதி வண்ணார்பேட்டையில் இருந்தது. அந்தக்  கட்டிடம் ஏற்கனவே பழுதடைந்ததால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்த  நிலையில் கல்லூரி வளாகத்தில் மாணவிகளுக்கு 2 இடங்களில் தனித்தனியாக  விடுதிகள் உள்ளன.

முகப்பு நுழைவு வாயிலில் உள்ள விடுதியின்  சுற்றுச்சுவர் மிகவும் தணிவாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மர்ம  நபர் ஒருவர் சுற்றுச்சுவர் ஏறிக் குதித்து கல்லூரி விடுதிக்குள்  நுழைந்துள்ளார். அங்கு மாணவிகள் தூங்கிக் கொண்டிருந்த அறைக்குள் நுழைய முயன்றதாக  கூறப்படுகிறது. நுழைய முடியாததால் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளார்.  அப்போது திடுக்கிட்ட மாணவிகள் கூச்சல் போடவும், மர்ம ஆசாமி அங்கிருந்து தப்பியோடி  விட்டார்.

இதுகுறித்து மாணவ, மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம்  முறையிட்ட நிலையில் நேற்று திடீரென சித்த மருத்துவ இளங்கலை மாணவ,  மாணவிகள் சுமார் 400 பேர், வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முதல்வர் அறை  முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.  சுமார் 2 மணி நேரம் தர்ணா நீடித்த  நிலையில் கல்லூரி முதல்வர் சாந்தமரியா, மாணவ, மாணவிகளுடன் பேச்சுவார்த்தை  நடத்தினார்.

பொதுப்பணித்துறையினர் மூலம் கட்டிட பழுதுகள் விரைவில் சரி செய்யப்படும் என்றார். ஆனால்  மாணவிகள் தரப்பில் இந்த பதிலுக்கு திருப்தி அடையாமல் சிசிடிவி காமிரா போன்ற  பாதுகாப்பு வசதிகளை செய்ய வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி தர்ணாவை தொடர்ந்தனர். இதுகுறித்து தகவலறிந்த பாளை இன்ஸ்பெக்டர் வாசிவம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். இரவு  நேரங்களில் இப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என  உறுதியளித்தனர்.

ஆயினும் போராட்டம் தொடர்ந்ததால் பரபரப்பு நிலவியது.  பின்னர்  பாளை தாசில்தார் ஆனந்தபிரகாஷ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பிரபு, உட்கோட்ட  பொறியாளர் ரமாதேவி ஆகியோர் கல்லூரி வளாகத்திற்கு வந்து பாதுகாப்பு  மேற்கொள்ள வேண்டிய இடங்களை ஆய்வு செய்தனர். விடுதியை ஒட்டி உள்ள  மரக்கிளைகளும் உடனடியாக அகற்றப்பட்டன. கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை  எடுத்ததால் பிற்பகலில் மாணவ மாணவிகள் தர்ணாவை விலக்கிக்கொண்டு  வகுப்புகளுக்கு சென்றனர்.

Related Stories: