ஏக்நாத் தலைமையில் 2024ல் பேரவை தேர்தல்; துரோகம் செய்ததால் உத்தவ் தாக்கரேவை பழிவாங்கினோம்!: பாஜக துணை முதல்வர் பட்னாவிஸ் தடாலடி

மும்பை: எங்களுக்கு துரோகம் செய்ததால் உத்தவ் தாக்கரேவை பழிவாங்கினோம் என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்த நிலையில், சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜக கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசு செய்த துரோகத்தால் கவிழ்ந்தது. வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் அடுத்த மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் (2024) முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடும். 2024 தேர்தலின்போது ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், நான் துணை முதல்வராகவும் போட்டியிடுவோம். பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சி அமைப்போம்.

உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகன் ஆதித்யா தாக்கரே ஆகியோர் நடந்து கொண்ட விதத்தால் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவை விட்டு வெளியேறினார். அவருக்கு நாங்கள் ஆதரவளித்தோம். உத்தவ் எங்களுக்கு செய்த துரோகத்திற்காக நாங்கள் அவரை பழிவாங்கினோம். ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியா மாற வேண்டும் என்றால், மகாராஷ்டிரா ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இருக்க வேண்டும். நான் துணை முதல்வரான பிறகு எனது அரசியல் அந்தஸ்து அதிகரித்துள்ளது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே என்னை துணை முதல்வராக பார்க்கவில்லை. ஒருவருக்கொருவர் கலந்தாலோசித்த பின்னரே முடிவுகளை எடுக்கிறோம்’ என்றார்.

Related Stories: