பாரதியார் பல்கலையில் தேர்வுகள் துவங்கும் நிலையில் பிகாம் சிஏ மாணவர்கள் பாடத்திட்டம் மாற்றம்: முன்னாள் துணைவேந்தரின் புத்தகங்கள் சேர்ப்பால் சர்ச்சை

கோவை:  கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 133 கல்லூரிகள் செயல்படுகிறது. இதில் பிகாம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு எம்எஸ் ஆபிஸ் என்ற பாடம் இருந்தது. நேற்று முன்தினம் பல்கலைக்கழகம் சார்பில் அனைத்து கல்லூரிகளுக்கும் எம்எஸ் ஆபிஸ் பாடம் நீக்கப்பட்டதாகவும் அதற்கு பதிலாக ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் அண்ட் மெஷின் லாங்குவேஜ், பிக் டேட்டா உள்ளிட்ட பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இளநிலை மாணவர்களுக்கு வரும் 21ம் தேதி தேர்வுகள் துவங்க உள்ளது. இந்நிலையில், பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சேர்க்கப்பட்டுள்ள பாடங்கள் அனைத்தும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் காளிராஜ் மற்றும்  வெளியிட்ட புத்தகங்கள் ஆகும். இவரின் பணி காலம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு முடிந்தது. இவர், பதவியில் இருக்கும்போதே தனது புத்தகங்களின் விற்பனையை அதிகரிக்க பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த பாடத்திட்டத்திற்கும் மாணவர்களுக்கும் சம்மந்தம் இல்லை என பேராசிரியர்கள் தரப்பில் கூறுகின்றனர். தவிர, தேர்வுக்கு 20 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், திடீரென பாடத்திட்டம் மாற்றப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதால், அதனை எப்படி மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பது என தெரியாமல் பேராசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். இது குறித்து பல்கலை ஆசிரியர் சங்க மாநில தலைவர் திருநாவுக்கரசு கூறுகையில், ‘‘ பிகாம் சிஏ மாணவர்களுக்கு எம்எஸ் ஆபீஸ் பாடம் மிகவும் முக்கியமானது.

இதனை மாற்றியிருப்பது தவறு. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்வுக்கு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இது மாணவர்களை பாதிக்கும். தனது புத்தகங்கள் விற்பனையை அதிகரிக்க இதுபோன்ற செயலில் துணைவேந்தராக இருந்தவர் ஈடுபடுவது முறைகேடானது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: