தேர்தலில் சீட் தருவதாக கூறியதால் ஆம் ஆத்மிக்கு ரூ.50 கோடி லஞ்சம்; டெல்லி ஆளுநருக்கு சுகேஷ் பரபரப்பு கடிதம்

புதுடெல்லி: தேர்தலில் போட்டியிட சீட் தருவதாக கூறியதால், ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.50 கோடி லஞ்சம் தந்ததாக ஹவாலா இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் டெல்லி ஆளுநருக்கு கடிதம் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றது உட்பட ஏராளமான மோசடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். சிறை அதிகாரிகளுக்கு பல கோடி லஞ்சம் கொடுத்து, அங்கு இருந்தபடியே மோசடி செயல்களில் ஈடுபட்ட அவர், தொழிலதிபரிடம் ரூ.200 கோடி பணம் பறித்தார். இது பற்றி அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்நிலையில், திகார் சிறை நிர்வாகத்தால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், எனவே, தன்னை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் சுகேஷ் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரை மண்டேலி சிறைக்கு மாற்ற உத்தரவிட்டதால், தற்போது இந்த சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், டெல்லி ஆளுநர் சக்சேனாவுக்கு கடந்த மாதம் 8ம் தேதி சுகேஷ் பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் இப்போது வெளியாகி உள்ளது. கடிதத்தில் அவர் எழுதி இருப்பதாவது: தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு அளிப்பதாக கூறியதால், ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.50 கோடி பணம் கொடுத்துள்ளேன். திகார் சிறையில இருந்தபோது இக்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின், அவருடைய செயலாளர், அவருடைய நண்பர் சுசில் ஆகியோர் என்னை சந்தித்தனர். அப்போது,‘சிறையில் உன் உயிருக்கு ஆபத்து உள்ளது. உனக்கு பாதுகாப்பு அளித்து, தேவையான வசதிகளை செய்து கொடுக்க மாதம் ரூ.2 கோடி தர வேண்டும்,’என்று மிரட்டினர். இதனால்,2019 ஆண்டு முதல் மண்டேலி சிறைக்கு மாற்றப்படும் வரையில், சத்யேந்திர ஜெயினுக்கு மட்டுமே ரூ.10 கோடி லஞ்சமாக கொடுத்துள்ளேன்.

கொல்கத்தாவில் இருந்து அவருக்கு இந்த பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது. திகார் சிறை டிஐஜி சந்தீப் கோயலுக்கும் மாதம் ரூ.1.50 கோடி என சொகுசு வாழ்க்கைக்காக மொத்தம் ரூ.12.50 கோடி வரை லஞ்சம் கொடுத்துள்ளேன். அமலாக்கத் துறை, சிபிஐ விசாரணையில் இந்த விவரங்களை தெரிவித்தேன். இதனால், திகார் சிறையில் பல ஆபத்துகளை சந்தித்தேன். அதனால்நான், சிறையை மாற்றக்கோரி வழக்கு தொடர்ந்தேன். சத்யேந்தர் ஜெயின் மீதான புகாருக்கான எல்லா ஆதாரங்களும் என்னிடத்தில் இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியும், அவர்களின் அரசும் உயர்மட்ட ஊழலில் ஈடுபட்டுள்ளதை என்னால் வெளிச்சம் போட்டு காட்ட முடியும். அதற்கான ஆதாரங்களை வழங்க தயாராக உள்ளேன். இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் சுகேஷ் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: