அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வருமானம் ரூ.1.51 லட்சம் கோடி; ஒன்றிய நிதி அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் ரூ.1.51 லட்சம் கோடி வருவாய் வசூலாகி உள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்துக்கான ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 718 கோடியாக உள்ளது. இதில் ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.26,039 கோடியாகவும், மாநில அரசுகளின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.33,396 கோடியாகவும், ஒன்றிய - மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.81,778 கோடியாகவும், செஸ் வரி வருவாய் ரூ.10,505 கோடியாகவும் உள்ளது. இதன் மூலம், ஏப்ரல் 2022க்கு அடுத்தபடியாக 2வது அதிகபட்ச வருவாய் ஜிஎஸ்டி வசூலான மாதமாக அக்டோபர் திகழ்கிறது.

அதேபோல், ரூ.1.50 லட்சம் கோடிக்கு மேல் ஜிஎஸ்டி வருவாய் வசூலாகி இருப்பது இது 2வது முறையாகும். உள்நாட்டு பணப் பரிமாற்றத்திலும் ஏப்ரல் 2022க்கு அடுத்தபடியாக, அக்டோபர் 2022 அதிகப்பட்ச வருவாய் ஈட்டியிருக்கிறது. இதுவரை தொடர்ந்து 9வது மாதமாக ரூ.1.4 லட்சம் கோடிக்கு மேல் ஜிஎஸ்டி வசூலாகி இருக்கிறது. அக்டோபரில் அதிக வரி வசூலித்த மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் ரூ.9,540 கோடியும், புதுச்சேரியில் ரூ.204 கோடியும் வசூலாகி உள்ளது.

Related Stories: