சாதாரண மக்களால் வாங்க முடியாத அதி பயங்கர வெடிபொருள் முபினுக்கு கிடைத்தது எப்படி? என்ஐஏ விசாரணை தீவிரம்

கோவை: சாதாரண மக்களால் வாங்க முடியாத அதி பயங்கர வெடிபொருள் முபினுக்கு கிடைத்தது எப்படி? என என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கோவை உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்த மாதம் 23ம் தேதி கார் வெடித்ததில் ஜமேஷா முபின் (29) பலியானார். சம்பவ இடத்தில் சோதனை செய்ததில் 2 சிலிண்டர்கள், ஆணிகள், பால்ரஸ் குண்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவத்தில் சதித்திட்டம் தீட்டியதாக முகமது அசாருதீன், அப்சர்கான் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கோவை மாநகர தனிப்படை போலீசரின் விசாரணை முடிந்து தற்போது என்ஐஏ விசாரணை நடைபெற்று வருகிறது.

முபின் வீட்டில் இருந்து 75 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது. அதில் ஒன்றரை கிலோ ‘பென்டா எரித்ரிட்டோல் டெட்ரா நைட்ரேட்’ (பிஇடிஎன்) என்ற வெடிபொருளும் அடங்கும். இது சக்தி வாய்ந்த வெடி பொருட்களில் ஒன்று. ஆர்டிஎஸ் ரக வெடிகுண்டுகளைவிட பல மடங்கு வீரியம் மிக்கது என்று சொல்லப்படுகிறது. பல நாடுகள் இதன் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பிஇடிஎன் வெடிபொருளை மோப்பநாய் எளிதாக கண்டுபிடிக்க முடியாது. எக்ஸ்ரே உள்ளிட்ட பிற உபகரணங்கள் மூலமும் கண்டறிய முடியாது.

எனவே இதனை பாதுகாப்பு சோதனைகளை கடந்தும் எடுத்து செல்ல முடியும் என தெரிகிறது. மேலும் நைட்ரோ கிளிசரின் என்ற வெடிபொருளும் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டதாக என்ஐஏ எப்ஐஆரில் இடம்பெற்றுள்ளது. இதுவும் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வெடிபொருள். இவ்வாறான சாதாரண மக்கள் வாங்க முடியாத அதிபயங்கர வெடிபொருட்கள் ஜமேஷா முபினுக்கு எவ்வாறு கிடைத்தது? அவருக்கு சர்வதேச பயங்கரவாத கும்பலுடன் தொடர்பு இருந்திருக்குமா? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டு உள்ளது. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* நெல்லையில் போலீசார் சோதனை

நெல்லை: கோவையில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த சாஹிப் முகமது அலி(35), சையது முகமது புகாரி(36), முகமது அலி(38) முகமது இப்ராஹிம் (37) ஆகிய 4 பேர் வீடுகளில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர். கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை திருவிழாவில் வெடிகுண்டு வெடித்தது சம்பந்தமாக இவர்களிடம் ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: