இந்தியா - ரஷ்யா நட்பு சிறப்பானது: அதிபர் புடின் பெருமிதம்

மாஸ்கோ: ‘இந்தியா உடனான ரஷ்யாவின் நட்பு சிறப்புமிக்கது. இது எதிர்காலத்திலும் தொடரும்,’ என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்தார். மாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பங்கேற்று பேசியதாவது: ரஷ்யா-இந்தியா இடையேயான உறவு பல்லாண்டு கொண்ட நெருங்கிய நட்பினால் உருவாக்கப்பட்டது.

எனவே, இந்த நட்பு சிறப்புமிக்கது. இந்தியா உடன் எப்போதும் பிரச்னை இருந்ததில்லை. ராணுவம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்பட அனைத்து விவகாரங்களிலும் இரு நாடுகளும் பரஸ்பரம் ஆதரவு அளித்து வருகின்றன. இந்த நட்பு எதிர்காலத்திலும் தொடரும்.

நாட்டின் நலன் கருதி சுதந்திரமான வெளிநாட்டு கொள்கையை பின்பற்றும் தலைவர்களில் மோடியும் ஒருவர். இதனால், இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் அறிமுகப்படுத்திய ‘மேக் இன் இந்தியா’ திட்டம் குறிப்பிடத்தக்க முயற்சியாகும். நாட்டின் முன்னேற்றத்தில் உண்மையான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது.

இந்தியா தனது பொருளாதார வளர்ச்சியை கண்டு பெருமை கொள்ள வேண்டும். இந்தியாவின் விவசாயத்துக்கு அடிப்படை தேவையான உரங்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும்படி மோடி கேட்டுக் கொண்டார். அதன்படி, உரங்கள் விநியோக அளவு 7.6 மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: