அரவக்குறிச்சி பகுதியில் சாலையில் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அரவக்குறிச்சி : அரவக்குறிச்சி பகுதியில் முக்கிய சாலைகளில் சர்வ சாதாரணமாக சுற்றித்திரியும் கால்நடைகளால் இரண்டு சக்கரம் உள்ளிட்ட வாகண ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் சாலையில் சுற்றித் திரியும் கால்கடைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியின் கடைவீதி உள்ளிட்ட முக்கியமான மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் பெரிய பெரிய மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் கூட்டமாக சாலைகளில் சர்வ சாதாரணமாக திரிகின்றன. இதனால் சாலையில் செல்பவர்கள் அச்சமுடன் செல்ல வேண்டியுள்ளது. காய்கறிகடை, மளிகை கடை உள்ளிட்ட கடைகளில் மாடுகள் தலையை விட்டு காய்கறி, அரிசி உள்ளிட்ட பொருள்களை தின்று சேதப்படுத்துகின்றன.

இதனால் வியாபாரிகள் நஷ்டத்திற்குள்ளாகின்றனர். இதேபோல, ராஜபுரம் ரோடு, ஊத்துர் ரோடு, பள்ளப்பட்டி ரோடு, கணக்குப்பிள்ளைபுதூர், வளயபட்டி பிரிவு முக்கியமாக தேசிய நெடுஞ்சாலை என்று பல்வேறு பகுதிகளில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் சாலைகளில் சர்வ சாதாரணமாக திரிகின்றன. கரூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் ஏராளமான கால்நடைகளை அதனை வளர்ப்போர் மேய்ச்சலுக்கு விடுகின்றனர். மேய்ந்து கொண்டிக்கும் ஆடு, மாடுகள் திடீரென்று சாலையின் குறுக்கே கூட்டமாக பாய்ந்து ஓடுகின்றன.

இதனால் கரூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வரும் கார், சரக்கு வேன், பைக் உள்ளிட்ட வாகனங்கள் கால்நடைகள் மீது மோதாமலிருக்க பக்கவாட்டில் திருப்பும்போதோ அல்லது பிரேக் பிடிக்கும்போதோ வாகனங்கள் சாலையில் கவிழ்ந்தோ சாய்ந்தோ விபத்திற்குள்ளாகின்றன. விபத்துக்கள் அதிகரிப்பதோடு வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகின்றனர்.

இதனால் பெரும் விபத்து ஏற்படும் முன்பு அரவக்குறிச்சி பகுதி சாலையில் சுற்றித் திரியும் கால்கடைகளை கட்டுப்படுத்த வேண்டும்.அப்பகுதியில் கால்நடை வளர்ப்போருக்கு இதுதொடர்பாக அறிவுறுத்தி எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: