யானை வழித்தடங்கள் தொடர்பாக விரிவான கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்த வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: யானை வழித்தடங்கள் தொடர்பாக அனைத்து தரப்பு மக்களிடம் விரிவான கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு வனத்துறை கடந்த ஏப்ரல் 29-ம் தேதியன்று யானை வழித்தடங்கள் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் 42 இடங்களில் யானை வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக ஒரு வார காலத்திற்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது மக்களிடையே குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. யானை வழித்தடங்கள் தொடர்பான அறிக்கையினை வெளியிட்ட வனத்துறை, போதுமான கால அவகாசம் வழங்காமல் ஒரு வார காலத்திற்குள் மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் எனக் கூறியிருப்பது எந்த வகையிலும் பொருத்தமானதல்ல. குறைந்த பட்சம் 60 நாட்களுக்கு கால அவகாசம் வழங்கி, அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துகளை அறியும் வகையில் விரிவான கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்திட அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post யானை வழித்தடங்கள் தொடர்பாக விரிவான கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்த வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: