அரசு திரைப்பட நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: அரசு திரைப்பட நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை நீட்டித்து செய்தி மக்கள் தொடர்புத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கி வருகிறது.

இந்நிறுவனம் திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி துறையில் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும், இயக்குநர்களையும் உருவாக்கி வரும் தனித்துவம் மிக்க நிறுவனமாகும். இந்நிறுவனத்தில், 2024-2025ம் கல்வி ஆண்டில் இளங்கலை காட்சிக்கலை (ஒளிப்பதிவு), இளங்கலை காட்சிக்கலை (எண்மிய இடைநிலை), இளங்கலை- காட்சிக்கலை (ஒலிப்பதிவு), இளங்கலை காட்சிக்கலை (இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல்), இளங்கலை காட்சிக்கலை (படத்தொகுப்பு),

இளங்கலை காட்சிக்கலை (உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன்) ஆகிய பிரிவுகளில் பட்டப்படிப்பிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடர்பான விண்ணப்பப் படிவங்களை 20ம் தேதி (நேற்று) வரை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்யவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 27ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும் கேட்டுக்கொள்ளப்பபட்டது. தற்போது, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்வதற்கான கால அவகாசம் வரும் 5ம் தேதி வரையிலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 10ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்படுகிறது.

இந்த நிறுவனத்தில் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு அடிப்படையிலும், குறிப்பாக அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான இட ஒதுக்கீடும், மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டு நடைமுறைகளை பின்பற்றியும் மாணவர் சேர்க்கை நடைபெறும். மேலும் விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை www.tn.gov.in எனும் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அரசு திரைப்பட நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: