கொடைக்கானல் அருகே கனமழை காட்டாற்று வெள்ளத்தால் மலைக்கிராமம் துண்டிப்பு: கயிறு கட்டி கடந்து செல்லும் மக்கள்

கொடைக்கானல்: பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கொடைக்கானலில் நேற்று காலையும் கனமழை நீடித்தது. இதனால், பள்ளங்கி கோம்பை அருகே உள்ள மூங்கில்காடு மலைக்கிராமத்தில் காலை 6 மணியளவில் திடீரென காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அக்கிராம மக்கள் ஆற்றை கயிறு கட்டி கடந்து வருகின்றனர். மூங்கில்காடு கிராமம் முழுவதுமாக விவசாய பகுதியாக இருப்பதால், மலைக்காய்கறிகளான கேரட், முள்ளங்கி உள்ளிட்டவையே அதிகம் விளைகிறது.

இந்த காய்கறிகளை வெளியே கொண்டு வர முடியாமல் அங்கிருப்போர் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலையில் உருண்ட பாறைகள்: கொடைக்கானல் மலைச்சாலையில் டம்டம் பாறை அருகே பலத்த மழை காரணமாக பாறைகள் உருண்டு சாலையின் குறுக்கே விழுந்தன. இந்த பாறைகளை நெடுஞ்சாலைத்துறையினர் விரைவாக அகற்றினர். இதேபோல தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்றும் மழை நீடித்தது. நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நேற்று மழை பெய்ததால் தாவரவியல் பூங்காவில் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்திலும் நேற்று பரவலாக மழை பெய்தது. நாகர்கோவிலில் பெய்த கனமழையால் வடிவீஸ்வரம் பறக்கின்கால் பகுதியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரத்து 70 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சேலத்தில் நேற்று மிதமான மழை பெய்தது.திண்டுக்கல் மாவட்டம் பழநியில் நேற்று பகலில் 1 மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. கோவை மாவட்டம் அன்னூரில் நேற்று நல்ல மழை பெய்தது.

ஊட்டி மலை ரயில் இன்றும் ரத்து: நீலகிரி மாவட்டம் கல்லாறு – அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்ததால் மலை ரயில் சேவை கடந்த 18,19,20ம் தேதி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ஊட்டி மலை ரயில் சேவை இன்றும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழு தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* 100 ஏக்கர் நெற்பயிர் மூழ்கியது
கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை பகுதியில் நேற்று மாலை 4.30 மணிக்கு பெய்த மழை இரவு 7.30 மணி வரை வெளுத்து வாங்கியது. இதனால் கரூர் ஈஸ்வரன் கோயிலுக்குள் மழைநீர் புகுந்தது. பிரதோஷம் என்பதால் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் கடும் அவதிப்பட்டனர். தான்தோன்றிமலை பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 50 வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது. புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசல், கீரனூர் பகுதிகளில் கோடை சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த 100 ஏக்கர் நெற்பயிர் மழைநீரில் மூழ்கியது.

* வீட்டு தூண் இடிந்து சிறுமி பலி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல் ஆலத்தூர் பகுதியை சேர்ந்தவர் உத்திரக்குமார். இவரது மகள் ருத்ரா(10). அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் லேசான மழை பெய்தது. இந்நிலையில் உத்திரக்குமார் வீட்டின் முன்பகுதியில் உள்ள தூண் இடிந்து அங்கு விளையாடிக்கொண்டிருந்த ருத்ரா பரிதாபமாக உயிரிழந்தார்.

The post கொடைக்கானல் அருகே கனமழை காட்டாற்று வெள்ளத்தால் மலைக்கிராமம் துண்டிப்பு: கயிறு கட்டி கடந்து செல்லும் மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: