பாகிஸ்தான் இனி வாலாட்ட முடியாது டிரோன்களை சுட்டு வீழ்த்த நவீன ஜாமர்; துப்பாக்கிகள் எல்லையில் ஊடுருவலை தடுக்க இந்திய ராணுவம் அதிரடி

புதுடெல்லி: பாகிஸ்தானில் இருந்து பறக்கும் டிரோன்களை சுட்டு வீழ்த்த அக்வா ஜாமர்கள், மல்டி ஷாட் துப்பாக்கிகளை எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இந்திய ராணுவம் நிறுவி உள்ளது. பாகிஸ்தானில் செயல்படும் பல்வேறு தீவிரவாத அமைப்புகள், இந்தியாவில் அமைதியை சீர்குலைக்க சதி திட்டங்களை தீட்டி வருகின்றன. பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியாக ஊடுருவும் தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் எல்லை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களில் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்கள் மற்றும் வீரர்களை சுட்டுகொல்கின்றனர். மேலும், ராணுவ முகாம், விமானப்படை தளம் ஆகியவற்றின் மீது டிரோன்கள் மூலம் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர். இதை ராணுவமும், விமானப்படையும் கண்டறிந்து சுட்டு வீழ்த்தி வருகின்றனர்.

இருப்பினும், சில மாதங்களுக்கு முன் உயர்மட்ட பாதுகாப்பு நிறைந்த ஜம்மு விமானப்படை தளத்தின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், டிரோன் தாக்குதல்களை முறியடிக்க அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட உபகரணங்கள் வாங்கி, எல்லையில் அத்தமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து வரும் டிரோன்களை கண்காணிக்க எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் அக்வா ஜாமர்கள், மல்டி-ஷாட் துப்பாக்கிகளை இந்திய ராணுவம் நிறுவி உள்ளது. அக்வா ஜாமர்கள் 4,900 மீட்டர் உயரம் வரை டிரோன்களை இடமறிக்கும் திறன் கொண்டவை. இந்த அக்வா ஜாமர்கள், எல்லைக்கு அப்பால் இயக்கப்படும் டிரோன்களை, ஆபரேட்டர் உதவியுடன் செயல்படாமல் நிற்க வைக்க முடியும். அக்வா ஜாமர் 5 கிமீ தூரம் வரை டிரோன் சிக்னலைக் கண்டறியும்.

அக்வா ஜாமர்கள் மூலம் டிரோன்கள் கண்டறியப்பட்டு, அதை சுட்டு வீழ்த்த மல்டி-ஷாட் துப்பாக்கிகளையும் ராணுவம் பொருத்தி உள்ளது. அக்வா ஜாமர் மற்றும் மல்டி ஷாட் துப்பாக்கி இயந்திரங்கள், பல வீரர்களால் இயக்கப்படுகின்றன. மல்டி ஷாட் துப்பாக்கிகள் மூலம் மூன்று துப்பாக்கிகள் ஒரு நேரத்தில் ஒன்பது ஷாட்களை முக்கோண வடிவத்தில் சுடுகின்றன. இதனால், எதிரி டிரோன்கள் தப்பிக்க வாய்ப்பே இல்லை. அக்வா ஜாமர் மற்றும் மல்டி ஷாட் துப்பாக்கிகள் ஆகிய இரண்டு அமைப்புகளும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிற்குப் பின்னால் 400 மீட்டர் தொலைவில் நிறுவப்பட்டுள்ளன. இந்த 2 அமைப்புகளும் எல்லை கட்டுப்பாட்டு கோட்டிற்கு பின்னால் 2.5 கிமீ தொலைவில் அமைந்துள்ள கண்காணிப்பு மையங்களால் கண்காணிக்கப்படுகின்றன.

Related Stories: