‘மகாதேவ்’ சூதாட்ட செயலி வழக்கில் தலைமறைவாக இருந்த பாலிவுட் நடிகர் கைது: சட்டீஸ்கரில் மும்பை போலீஸ் அதிரடி

மும்பை: சூதாட்ட செயலி வழக்கில் தலைமறைவாக இருந்த பாலிவுட் நடிகர் சாஹில் கான், சட்டீஸ்கரில் பதுங்கியிருந்த நிலையில் மும்பை போலீஸ் அதிரடியாக கைது செய்தது. சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் இவரது நண்பர் ரவி உப்பால் ஆகியோர் கடந்த 2018ம் ஆண்டு துபாயில் இருந்து கொண்டு, ‘மகாதேவ்’ என்ற பெயரில் சூதாட்ட செயலியை உருவாக்கினர். இதன்படி போக்கர், கார்டு கேம்ஸ், டென்னிஸ், கிரிக்கெட், பாட்மிண்டன், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளின் பெயரில் சூதாட்டம் நடத்தப்பட்டது.

இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்தும் இந்தச் செயலி வாயிலாக சூதாட்டம் நடைபெற்றிருக்கிறது. மகாதேவ் செயலியின் உரிமையாளர் சவுரப் சந்திரகரின் திருமணம் துபாயில் நடைபெற்றது. இதற்காக ரூ.260 கோடி செலவிடப்பட்டது. இந்த திருமண விழாவில் பாலிவுட் நடிகர், நடிகைகள் பலர் பங்கேற்றனர். அவர்களுக்கு ஹவாலா முறையில் பெரும் தொகை கைமாறியதாகக் கூறப்படுகிறது. துபாயில் நடைபெற்ற சவுரப் சந்திரகரின் திருமணம் மூலம் மகாதேவ் செயலி குறித்தும், அந்த செயலி வாயிலாக ரூ.15,000 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றிருப்பதாகவும் தெரிவித்த அமலாக்கத் துறை, மகாதேவ் சூதாட்ட செயலி நிறுவனத்திடம் இருந்து சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் ரூ.508 கோடி பெற்றதாக குற்றம்சாட்டியது.

இந்நிலையில் மகாதேவ் சூதாட்ட செயலிக்கு விளம்பரப்படுத்தியது மற்றும் அதன் மூலம் ஆதாயமடைந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பாலிவுட் நடிகர் சாஹில் கானை மும்பை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து மும்பை போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘சட்டீஸ்கரில் பதுங்கியிருந்த சாஹில் கானை கைது செய்தோம். அவர் விரைவில் மும்பைக்கு அழைத்து வரப்படுவார். ஏற்கனவே சாஹில் கான் மீது வழக்குபதிவு செய்யப்பட்டிருந்ததால், அவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியிருந்தார். அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து அவரது மனுவை தள்ளுபடி செய்தது. மகாதேவ் சூதாட்ட புகாரின் அடிப்படையில் இதுவரை 31 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றனர்.

The post ‘மகாதேவ்’ சூதாட்ட செயலி வழக்கில் தலைமறைவாக இருந்த பாலிவுட் நடிகர் கைது: சட்டீஸ்கரில் மும்பை போலீஸ் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: