பாஜவின் 417 வேட்பாளர்களில் 116 பேர் கட்சி மாறியவர்கள்: காங்கிரஸ் புள்ளிவிவரம் வௌியீடு

அகமதாபாத்: மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்களில் 116 பேர் கட்சி மாறியவர்கள் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள மோடி காங்கிரஸ் அரசு பரம்பரை வரியை ரத்து செய்தது பற்றி பல்வேறு அவதூறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி கூறியதாவது, “பணம், பழி வாங்கும் அரசியல், அரசு நிறுவனங்களை தவறாக பயன்படுத்துவதன் மூலம் ஜனநாயக அமைப்புகளின் மதிப்பை பாஜ குறைத்து வருகிறது. 10 வருடங்கள் பிரதமராக இருந்து அரசியல்வாதியாக விட்ட மோடி, தவறான, அவதூறு பேச்சுகளால் அரசியல் அமைப்பு, பிரதமர் பதவி ஆகியவற்றுக்கான கண்ணியத்தை குறைத்து வருகிறார்.

தற்போதைய தேர்தல்களில் பிரதமர் மோடி பேசுவதை கடந்த 73 ஆண்டுகாலத்தில் மற்ற பிரதமர்களின் பேச்சுடன் ஒப்பிட முடியாது. மோடியின் இந்த பேச்சுகள் பாஜவின் அவநம்பிக்கையை, தோல்வியை பிரதிபலிக்கிறது. இது கலாச்சாரமல்ல, நியாயமானதல்ல. இது மிகவும் தவறானது. இந்திய ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது.

ஆனால் மோடியின் அனைத்து முயற்சிகளும் தோல்வி அடையும்” என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “பாஜ தற்போது அறிவித்துள்ள 417 வேட்பாளர்களில் 116 பேர் பிற கட்சிகளில் இருந்து வந்தவர்கள். அவர்களில் பெரும்பாலானோர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். பாஜ குற்றம்சாட்டும் நபர்கள் அந்த கட்சியில் சேர்ந்தால் அவர்களின் வாஷிங் மெஷின் அவர்களை சுத்தமாக்கி விடும்” என்று விமர்சித்துள்ளார்.

The post பாஜவின் 417 வேட்பாளர்களில் 116 பேர் கட்சி மாறியவர்கள்: காங்கிரஸ் புள்ளிவிவரம் வௌியீடு appeared first on Dinakaran.

Related Stories: