கோவையில் எந்தவிதமான பதற்றமும் இல்லை; அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் செயல்படுகின்றனர்.! அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

கோவை: கோவையில் எந்தவிதமான பதற்றமும் இல்லை; அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் செயல்படுகின்றனர் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையரை சந்தித்த பிறகு அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இதுதொடர்பாக பேட்டி அளித்த அவர் கூறியதாவது; யாருடைய குறுக்கீடும் இல்லாமல் விசாரணை நடைபெற்று வருகிறது. மாநிலம் கடந்தும் விசாரணை தேவை என்பதால் என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கோவை கார் வெடிப்பு சம்பவம் நடந்த இடத்தில் 12 மணி நேரத்தில் இயல்பு நிலை திரும்பியது.

கோவையில் பொதுமக்கள் அச்சமின்றி தீபாவளி கொண்டாடினர். சிலர் குறுகிய மனப்பான்மையுடன் கோவை சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கின்றனர். கோவையில் ஏதோ பதற்றம் நிலவியது போல் சிலர் செய்தி வெளியிடுவதற்கு அமைச்சர் கண்டனம் தெரிவித்தார். போர்க்கால அடிப்படையில் அமைதியை காவல்துறை நிலைநாட்டியுள்ளதாக அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் காவல்துறையினர் துரிதமாகவும், வெளிப்படையாகவும் செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் பூதாகரமாக பார்க்கின்றனர், அதற்கு ஊடகங்கள் இடம் தரக்கூடாது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும்.

புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது போலீசுக்கு முன்பே அண்ணாமலை சில தகவல்களை வெளியிட்டது ஏன்? காவல்துறை அறிவிப்பதற்கு முன்பே பாஜக மாநில தலைவருக்கு சம்மந்தப்பட்ட நபர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்தது எப்படி? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். கோவையில் காரில் வெடிகுண்டு வெடிக்கவில்லை, மக்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்த வேண்டாம். கோவை மாவட்டத்தை தமிழ்நாடு அரசு புறக்கணிக்கவில்லை. மற்ற மாவட்டங்களை விட கோவை மாவட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: