உடுமலை-தளி மேம்பாலத்தில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து-போக்குவரத்து பாதிப்பு

உடுமலை : உடுமலை தளி மேம்பாலத்தில் நேற்று காலையில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து அமராவதி அணை, திருமூர்த்தி அணை, மூணாறு உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் முக்கிய வழிப்பாதையான தளி செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது.

தினமும் மேம்பாலம் வழியாக நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் பயணிப்பது வழக்கம். விடுமுறை காலங்கள் மற்றும் சனி ஞாயிறு உள்ளிட்ட வார விடுமுறைகள் தினத்தின்போது சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அதிக அளவில் இப் மேம்பாலத்தின் வழியாக பயணிக்கின்றன.மேலும் அமராவதி நகர், திருமூர்த்தி நகர், மலைவாழ் மக்கள், தளி சுற்றுவட்டார நூற்றுக்கணக்கான கிராம மக்கள், உடுமலை பஸ் ஸ்டாண்ட், நகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், போக்குவரத்து துறை அலுவலகம் ,வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு இவ்வழித்தடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்து செல்கின்றனர்.

போக்குவரத்து மிகுந்த என்ற தளி ரயில்வே மேம்பாலத்தில் அவ்வப்போது விபத்துக்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலை உடுமலையிலிருந்து தளி மேம்பாலம் நோக்கி சென்ற பேருந்தின் பின்னால் சென்ற சொகுசு கார் மேம்பாலம் அருகே பேருந்தை முந்தி செல்ல முயன்றது. அப்போது மேம்பாலத்தில் இருந்து இறங்கிய சரக்கு வாகனம் ஒன்றுடன் மோதியது. இதில் அடுத்தடுத்து மூன்று வாகனங்களும் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்ட நிலையில் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து உடுமலை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தனி வழியாக செல்லக்கூடிய பேருந்துகள் ராஜேந்திரா வீதி உழவர் சந்தை ரோடு வழியாக திருப்பி விடப்பட்டது. இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களும் இதே போல் மாற்றுவழிப்பாதையில் திருப்பி விடப்பட்டன. விபத்து காரணமாக சுமார் 2 மணி நேரம் தலி மேம்பாலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து விபத்து நிகழும் தளி மேம்பாலத்தின் நுழைவுப் பகுதியில் விபத்துகளை தடுக்க வேகத்தடை அல்லது மாற்று ஏற்பாடு ஏதாவது செய்ய வேண்டும் என இப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதேபோல் உடுமலை காந்தி சதுக்கம் பகுதியில் சிறு வியாபாரிகள் அதிகளவில் நடைபாதைகளில் கடை வைத்து நடத்தி வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த இப்பகுதியிலும் அவ்வப்போது விபத்துகள் நடைபெற்று வருவதால் போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு விபத்துகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: