நெல்லை, தூத்துக்குடியில் வானில் நீண்ட நேரம் நீடித்த வர்ணஜாலம் தொடர் பட்டாசு முழக்கத்தால் காற்று மாசு அதிகரிப்பு-2 ஆண்டுக்கு பின் தீபாவளி உற்சாக கொண்டாட்டம்

நெல்லை : கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் மக்கள் 2 ஆண்டுகளுக்கு பின்னர் தீபாவளியை கட்டுப்பாடின்றி  உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இரவு வானில் நீண்ட நேரம்  பட்டாசுகள் பறந்ததால் வானில் வர்ணஜாலம் ஏற்பட்டது. தொடர்  பட்டாசு முழக்கத்தால் காற்று மாசு ஏற்பட்டது.

இந்துக்களின்  மிக முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் இந்தியாவிலும்,  உலகம் முழுவதும் வசிக்கும் இந்தியர்களாளும் வழக்கமான உற்சாகத்துடன்  கொண்டாடப்பட்டது. குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சத்துடன் தீபாவளி  பண்டிகை கடந்து சென்றது. கட்டுப்பாடுகள்,  வருவாய் இழப்பு போன்ற காரணங்களால் 2 ஆண்டுகளாக களை இழந்திருந்த  தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால்  முழுமையான உற்சாகத்துடன் மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

அதிகாலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்ந்து நீராடி பலகாரங்களை கடவுளுக்கு  படைத்து வழிபட்டனர். தொடர்ந்து புத்தாடை அணிந்து ஒருவருக்கு ஒருவர் தீபாவளி  வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். சிறுவர்கள்  முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். இளைஞர்கள் தீபாவளி  ரீலிஸ் புதுப்படங்களை பார்க்க திரையரங்குகளில் குவிந்தனர். பட்டாசு சத்தம்  பிற்பகலில் சற்று ஓய்ந்திருந்த நிலையில் மாலை 6 மணிக்கு மேல் மீண்டும்  தீபாவளி உற்சாகம் களைகட்டியது.

 மாலை 6 மணிக்கு  தொடங்கி இரவு 10 மணியை கடந்த பின்னரும் வானில் பட்டாசு ராக்கெட்டுகள் பறந்த  வண்ணம் இருந்தன. இதனால் வானில் திரும்பிய பக்கமெல்லாம் பட்டாசு ஒளி  வர்ணஜாலமாக காட்சி அளித்தன. வழக்கமான வான்வெடி பட்டாசுகளில் புதுமையான  பட்டாசுகள் விண்ணில் பறந்தன. இந்த ஆண்டு  அறிமுகமான ஒருவகை வானவெடி வானில் நீண்ட தூரம் ஒளியுடன் சென்று பின்னர்  பக்கவாட்டில் பல மீட்டர் தூரம் மிதந்து சென்று மறைந்தது. இது வானில்  ேதான்றும் அபூர்வ காட்சி போல் தென்பட்டது. சிறுவர். சிறுமியர் வழக்கமான  பட்டாசுகளை வீட்டு வாசலில் வெடித்து மகிழ்ந்தனர்.

தொடர் பட்டாசு முழக்கத்தால் இரவு சாலைகளில் புகை மாசு  அதிகமாக ஏற்பட்டது. சில சாலைகளில் புகை மண்டலமாக பட்டாசு மாசு மற்றும் நெடி  ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். நெல்லை, தூத்துக்குடியில் பட்டாசு புகையால் வழக்கத்தைவிட காற்று மாசு அதிகரித்தது. இதனால்  நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள் வெளியில்

வருவதை தவிர்த்தனர்.

Related Stories: