2ம் அரையாண்டு சொத்துவரி செலுத்த நவம்பர் 15ம் தேதி வரை கால அவகாசம்: மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவிப்பு

சென்னை: தனிவட்டி 2 சதவீதம் இல்லாமல் இரண்டாம் அரையாண்டு சொத்து வரி செலுத்த நவம்பர் 15ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: 2022-23ம் நிதியாண்டின் 2ம் அரையாண்டிற்கான சொத்துவரி பொது சீராய்வின்படி சொத்து உரிமையாளர்களால் அக்டோபர் 1ம் தேதி முதல் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் 18ம் தேதி வரை 5.17 லட்சம் சொத்து உரிமையாளர்கள் நிலுவை இல்லாமல் சொத்து வரியினை செலுத்தியுள்ளனர். மேலும், 2ம் அரையாண்டு தொடக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள்ளாக சொத்துவரி செலுத்திய சொத்து உரிமையாளர்களுக்கு ரூ. 4.67 கோடி ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்ட விதி-29Dன்படி, தாமதமாக  சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய தொகையுடன் கூடுதலாக 2 சதவீதம் தனிவட்டி சேர்த்து செலுத்த வேண்டும். சொத்துவரி பொது சீராய்வின்படி, உயர்த்தப்பட்ட சொத்து வரியினை இதுவரை செலுத்தாத சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரி மதிப்பீட்டிற்குரிய  உயர்த்தப்பட்ட சொத்துவரியினை தனிவட்டி இல்லாமல் செலுத்த வரும் நவம்பர் 15ம் தேதி வரை நீட்டித்து கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, சொத்துவரி பொது சீராய்வின்படி, உயர்த்தப்பட்ட சொத்துவரியினை இதுவரை செலுத்தாத சொத்து உரிமையாளர்கள், இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் மேற்குறிப்பிட்ட ஏதேனும் ஒரு வழிமுறைகளில் செலுத்தி 2 சதவீத தனிவட்டியினை தவிர்க்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: