வாக்குறுதியை நிறைவேற்றிய நிதின் கட்கரி; தொகுதிக்காக 32 கிலோ உடல் எடையை குறைத்த பாஜக எம்பி: ரூ2,300 கோடி நிதி ஒதுக்கப்பட்டதால் மகிழ்ச்சி

உஜ்ஜயினி: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தான் அளித்த வாக்குறுதியின்படி, உடல் எடையை குறைத்து வரும் பாஜக எம்பியின் தொகுதி வளர்ச்சி நிதிக்காக ரூ. 2,300 கோடி அளவிற்கு ஒதுக்கீடு செய்து அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்  நிதின் கட்கரி, மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் நடந்த நிகழ்ச்சியில்  பேசும் போது, ‘மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினி தொகுதி எம்பி அனில் ஃபிரோஜியாவின் உடல் எடை 135 கிலோ  இருப்பதாக என்னிடம் தெரிவித்தார்.

அவர் தனது எடையை குறைக்கும் பட்சத்தில், ஒவ்வொரு  கிலோ எடை குறைப்புக்கும் தலா ரூ. 1,000 கோடி அளவிற்கு நிதி ஒதுக்கீடு  செய்து, அவரது தொகுதியின் வளர்ச்சிக்கு அந்த நிதி வழங்கப்படும்’ என்றார். நிதின் கட்கரியின் சவாலை ஏற்ற எம்பி அனில் ஃபிரோஜியா, தனது உடல் எடையை குறைப்பதில் ஆர்வம் காட்டினார். அதற்காக பல்வேறு உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தற்போது தனது உடல் எடையை 32 கிலோ அளவிற்கு குறைத்துவிட்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘அமைச்சர் நிதின் கட்கரியின் சவாலை ஏற்று, பல்வேறு உடற்பயிற்சிகளை செய்து தற்போது எனது உடல் எடையை 32 கிலோ குறைத்துள்ேளன்.

இதற்காக தினமும் காலை 5.30 மணிக்கு எழுந்து நடைபயிற்சி செய்கிறேன். தொடர்  ஓட்டம், உடற்பயிற்சி மற்றும் யோகா ஆகியவற்றை மேற்கொள்கிறேன். ஆயுர்வேத  முறையில் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறேன். நிதின் கட்கரி அளித்த வாக்குறுதியின்படி, உஜ்ஜயினி தொகுதிக்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரியிருந்தேன். எனது தொகுதியின் வளர்ச்சிக்காக எனது உடல் எடையை மேலும் குறைக்க தயாராக இருக்கிறேன். இதற்கிடையே ஒருமுறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தேன்.

அவர் என்னை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். அவர் அளித்த வாக்குறுதியின்படி, எனது தொகுதிக்கு ரூ 2,300 கோடி மதிப்பிலான தொகுதி வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்’ என்றார்.

Related Stories: