பாலியல் புகார் வழக்கில் தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா கைது

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பாலியல் புகாரில் சிக்கி வெளிநாட்டில் பதுங்கி இருந்த ஹாசன் தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு படை போலீசார் பெங்களூரு கெம்பேகவுடா சார்வதேச விமான நிலையத்தில் நள்ளிரவு கைது செய்தனர்.  கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரானான இவர் பல பெண்களை பலாத்காரம் செய்த வீடியோக்கள் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பாலியல் குற்றச்சாட்டில் பிரஜ்வலின் தந்தையும் ஹொலெநரசிபுரா தொகுதி எம்.எல்.ஏவுமான ரேவண்ணாவும் சிக்கினார். ஆனால் ஏப்ரல் 27ம் தேதியே பிரஜ்வல் ரேவண்ணா அவரது டிப்ளோமேடிக் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி ஜெர்மனிக்கு தப்பிவிட்டார். பாலியல் வழக்கில் சிக்கிய பிரஜ்வல் மஜதவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பிரஜ்வலை வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு அழைத்துவந்து கைது செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நீதிமன்றத்தில் எஸ்.ஐ.டி பிரஜ்வலுக்கு பிடிவாரண்ட் பெற்று வைத்திருந்தது.

இன்டர்போல் பிரஜ்வலுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட்டிருந்தது. பிரஜ்வலின் டிப்ளோமேடிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா இரண்டு முறை பிரதமருக்கு கடிதம் எழுதினார். எஸ்.ஐ.டியும் வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தது. மாநில அரசும், எஸ்.ஐ.டியும் கொடுத்த அழுத்தத்தினால், பிரஜ்வலுக்கு வெளியுறவு அமைச்சகம், அவரது பாஸ்போர்ட்டை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

அனைத்துவகையிலும் தனக்கு ஏற்பட்ட அழுத்தம் காரணமாக மே 31ம் தேதி எஸ்.ஐ.டி விசாரணைக்கு ஆஜராவதாக பிரஜ்வல் ரேவண்ணா கடந்த 27ம் தேதி வீடியோ வெளியிட்டிருந்தார். அதன்படி, நேற்று ஜெர்மனியின் முனிச் நகரிலிருந்து விமானம் மூலம் பெங்களூருவுக்கு அவர் புறப்பட்டுள்ளதாக எஸ்ஐடிக்கு தகவல் கிடைத்தது. ரேவண்ணா பயணம் செய்த விமானம், பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு நள்ளிரவு 12.40 மணிக்கு வந்தது.

அதில் வந்திறங்கிய பிரஜ்வல் ரேவண்ணாவை, விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்த சிறப்பு புலனாய்வு படை போலீசார் நள்ளிரவு 1.09 மணிக்கு கைது செய்தனர். அவரை பலத்த பாதுகாப்புடன் சிஐடி அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். இன்று நாள் முழுவதும் பிரஜ்வல் ரேவண்ணாவிடம் எஸ்ஐடி அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர். பாலியல் வன்கொடுமை புகாரில் 35 நாட்களுக்கு பின் பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

The post பாலியல் புகார் வழக்கில் தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா கைது appeared first on Dinakaran.

Related Stories: