இலங்கையில் இந்து தமிழர்களே பாதிப்பு திருச்சியில் பிறந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை வழங்கலாம்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: திருச்சியைச் சேர்ந்த அபிராமி, தனக்கு இந்திய குடியுரிமை வழங்கக் கோரி கலெக்டரிடம் அளித்த மனுவை ஒன்றிய அரசுக்கு பரிந்துரைக்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரின் பெற்றோர் இலங்கை குடியுரிமை பெற்றவர்கள். அங்கு நடந்த உள்நாட்டு போரால் இந்தியாவிற்கு வந்துள்ளனர். தற்போது 29 வயதாகும் மனுதாரர் திருச்சியில் கடந்த 1993ல் பிறந்துள்ளார். இந்திய அரசின் ஆதார் அட்டை பெற்றுள்ளார். 29 ஆண்டுகளாக இங்கேயே வசிப்பதால் இந்திய குடியுரிமை கேட்கிறார். மனுதாரர் இலங்கை குடியுரிமை பெறவில்லை. எனவே, அவரது கோரிக்கையை நிராகரிப்பது சரியானதாக இருக்காது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கேதசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்கிடும் வகையில் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அதில் இலங்கை இடம் பெறவில்லை. ஆனாலும் இவர்களுக்கும் குடியுரிமை வழங்குவதற்கான சம சாத்தியக்கூறுகள் உள்ளன. ஏனெனில் அங்கு இந்து தமிழர்களே அதிகம் பாதித்துள்ளனர். எனவே, குடியுரிமை கேட்கும் மனுதாரரின் மனுவை ஒன்றிய அரசுக்கு பரிந்துரைக்க மறுக்க முடியாது. இதன்படி மனுவை பரிந்துரைக்க வேண்டும். இந்த பரிந்துரையின் கீழ் ஒன்றிய உள்துறை செயலர் 16 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மனு ஏற்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: