நளினி, ரவிச்சந்திரன் விடுதலை விவகாரம் ஒன்றிய அரசு தலையிட முகாந்திரம் கிடையாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

புதுடெல்லி: நளினி, ரவிச்சந்திரன் விடுதலை விவகாரத்தில் ஒன்றிய அரசு தலையிட முகாந்திரம் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டுள்ளது. நன்னடத்தையை அடிப்படையாக கொண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவித்தது போன்று எங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசும், ஒன்றிய அரசும் பதிலளிக்க கடந்த மாதம் 26ம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, தமிழக அரசு நேற்று முன்தினம் தாக்கல் செய்த பதில் மனுவில், இந்த 2 பேரின் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கலாம் என தெரிவித்தது.

இந்நிலையில், நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்தனா அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ராகேஷ் துவேதி, ஜோசப் அரிஸ்டாட்டில், ‘இந்த விடுதலை விவகாரத்தில் ஒன்றிய அரசு தலையிட எந்த முகாந்திரமும் கிடையாது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றமே முந்தைய உத்தரவில் தெளிவாக தெரிவித்துள்ளது. அதனால், இவர்களின் விடுதலை தொடர்பாக நீதிமன்றம் ஒரு முடிவு எடுத்து உத்தரவை பிறப்பிக்க வேண்டும்,’ என தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, வழக்கை  திங்கட்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Related Stories: