மகாராஷ்டிரா தேர்தலில் போட்டியிட உதயசூரியன் சின்னத்தை கேட்கும் உத்தவ் தாக்கரே: தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

புதுடெல்லி: சிவசேனா கட்சியின் வில் அம்பு சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கிய நிலையில், தனக்கு உதயசூரியன் சின்னத்தை வழங்கும்படி உத்தவ் தாக்கரே கேட்டுள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்து பாஜ.வுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ள முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தங்கள் அணிதான் உண்மையான சிவசேனா என்று அறிவிக்கும்படி, தேர்தல் ஆணையத்திடம் கோரியுள்ளார். உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார்.  

இந்நிலையில், இம்மாநிலத்தில் அடுத்த மாதம் 3ம் தேதி அந்தேரி சட்டப்பேரவை தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கிறது. இதில், சிவசேனாவின்  வில் அம்பு சின்னத்தை தனது அணிக்கு ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு ஷிண்டே கடிதம் அனுப்பினார். இதற்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி,  ‘ஏக்நாத் ஷிண்டே அணியினர் தாங்களாகவே சிவசேனா கட்சியில் இருந்து விலகிச் சென்று விட்டனர். இதனால், கட்சியின் வில் அம்பு சின்னத்துக்கு அவர்கள் உரிமை கோர முடியாது,’ என்று தேர்தல் ஆணையத்துக்கு பதில் கடிதம் அனுப்பினார்.

இந்நிலையில், வில் அம்பு சின்னத்தை இருதரப்புக்கும் வழங்காமல், தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் இரவு தற்காலிகமாக முடக்கியது.  மேலும், சிவசேனா கட்சிப் பெயரை இருதரப்பும் பயன்படுத்தவும் தடை விதித்தது. மேலும், இடைத்தேர்தலை சந்திப்பதற்கான மாற்று ஏற்பாடாக புதிய கட்சி பெயர், சின்னத்தை கேட்கும்படி உத்தரவிட்டது.

இதன்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தவ் தாக்கரே நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில், புதிய கட்சியின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளார். அவர் கேட்டுள்ள கட்சி பெயர்களின் விவரம் வெளியாகவில்லை. அதே நேரம், உதய சூரியன், தீப்பந்தம், திரிசூலம் ஆகிய 3 சின்னங்களில் ஒன்றை தங்களுக்கு ஒதுக்கும்படி அவர் கோரியுள்ளார்.

Related Stories: