காரை திறந்தபோது வாகனம் மோதியதால் கர்நாடக உயர் நீதிமன்ற வக்கீல் பரிதாப பலி: இன்ஜினியரிங் மாணவர் கைது

 

பெங்களூரு: பெங்களூருவில் சாலையோரம் நின்ற கார் கதவைத் திறந்தபோது, அதிவேகமாக வந்த வாகனம் மோதியதில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் பெங்களூரு உல்லால் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (40). கர்நாடக உயர் நீதிமன்ற வழக்கறிஞரான இவர், நேற்று காலை 11 மணியளவில் உல்லால் 80 அடி சாலையில் தனது காரை நிறுத்திவிட்டு வெளியே இறங்கினார்.

ஓட்டுநர் இருக்கையின் கதவைத் திறந்து சாலையில் நின்றுகொண்டிருந்தபோது, பின்னால் மின்னல் வேகத்தில் வந்த கார் அவர் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் காரின் கதவோடு சேர்த்துப் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஜெகதீஷ், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பார்ப்பவர்களைப் பதைபதைக்க வைத்துள்ளது. விபத்து நடந்ததும் அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று பார்த்தபோது, வழக்கறிஞர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த பைதரஹள்ளி போக்குவரத்துப் போலீசார், விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த சுஹாஸ் என்ற இறுதியாண்டு பொறியியல் கல்லூரி மாணவரைக் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், கார் மிக அதிவேகமாக வந்ததே விபத்திற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. அவர் மது போதையில் வாகனம் ஓட்டினாரா என்பது குறித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: