மும்பை: மோசடி வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மகாராஷ்டிர அமைச்சரவையிலிருந்து ‘ரம்மி அமைச்சர்’ என அழைக்கப்படும் மாணிக்ராவ் கோகட் ராஜினாமா செய்துள்ளார். மகாராஷ்டிராவில் துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணிக்ராவ் கோகட், கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டசபைக் கூட்டத்தொடரின் போது செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடிய வீடியோ வெளியாகி சர்ச்சையில் சிக்கியதால் ‘ரம்மி அமைச்சர்’ என அழைக்கப்பட்டார்.
இவர் மீது 1995ம் ஆண்டு ஏழைகளுக்கான வீட்டு வசதி வாரியத் திட்டத்தில் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், நாசிக் நீதிமன்றம் கடந்த 16ம் தேதி இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டதால், கைது நடவடிக்கையைத் தவிர்க்க உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காகச் சேர்ந்தார்.
குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவரை அமைச்சரவையில் நீடிக்க அனுமதிக்க முடியாது என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கறாராகத் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஆளுநர் ஆச்சார்யா தேவ்வ்ரத் அமைச்சரிடமிருந்த விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் உள்ளிட்ட துறைகளைப் பறித்தார். நெருக்கடி முற்றிய நிலையில், துணை முதல்வர் அஜித் பவாரிடம் தனது ராஜினாமா கடிதத்தை மாணிக்ராவ் கோகட் அளித்தார். இந்தக் கடிதத்தை நேற்று ஏற்றுக்கொண்ட முதல்வர் பட்னாவிஸ், அவரை அமைச்சரவையிலிருந்து விடுவித்துள்ளார். ஏற்கனவே தனஞ்சய் முண்டே ராஜினாமா செய்த நிலையில், தற்போது கோகட் வெளியேறியிருப்பது மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
